ஆழஊடுருவும் துரோகிகளால் அதிர்ச்சிகள்!  - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

Thursday December 28, 2017

தமிழீழ விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் பெயரால் தாயகத்திலும் பன்னாடு தழுவிய ரீதியிலும் நடைபெற்றுவரும் சம்பவங்கள் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன. தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இச்சம்பவங்களின் தாக்கம் தொடர்பாக தமிழ்த் தேசியவாதிகள் தீவிர அவதானம் செலுத்தி வருகின்றனர்.

மாவீரர்களின் பெயரால், தமிழர்களின் பெயரால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடித்தனமான இச்செயற்பாடுகள் தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தடுத்து நிறுத்திவிடும் என தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவருக்கு துரோகம் இழைத்த கே.பி - தயாமோகன் அணியின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் வெளிவந்த தகவல்கள் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளன. தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்துவிட்டு, தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் இத்தகையவர்களின் செயற்பாடுகளை இனியும் அனுமதிக்க முடியாது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு சிறீலங்கா படையினரும் சிறீலங்கா அரச புலனாய்வுத்துறையும் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன. இதற்கு கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஏற்கனவே துணை போயுள்ளார். அவர் தனது நெருங்கிய சகாக்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்ற விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெறுமனே ஆயுதப் போராட்டத்தில் மட்டும் ஈடுபட்ட அமைப்பு அல்ல. கெரில்லா வடிவில் ஆரம்பிக்கப்பட்ட புலிகளின் போராட்டம் காலப்போக்கில் தேசியத் தலைவர், தளபதிகள், போராளிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மரபுவழி இராணுவமாகக் கட்டியயழுப்பப்பட்டது. இந்த அபார வளர்ச்சிக்கு தாயகத்திலும் பன்னாடுகளிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியிருந்தனர். பொதுமக்கள் மட்டுமன்றி பன்னாட்டு அரசியல் தலைவர்கள், பன்னாடுகளில் விடுதலைக்காக போராடும் அமைப்புக்களும் விடுதலைப் புலிகளின் கொள்கையை ஏற்றிருந்தன. அதனால்தான் அவர்களும் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

உலகின் மூலை முடுக்கெங்கும் தமிழீழ விடுதலை நெருப்பு கனல்விட்டு எரிந்தது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், தாய்மார்கள் என்ற பாகுபாடு இன்றி அனைவராலும் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்ட இந்த விடுதலைத் தீயைத் தண்ணீர் ஊற்றி அணைப்பதற்கு துரோகிகள் சிலர் கங்கணகம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் இந்த விடுதலைத் தீயை வளர்த்தவர்களே இவ்வாறான துரோகத்தனங்களுக்கு விலைபோயுள்ளமைதான் வேதனையானது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மெளனித்தன. அத்தோடு எல்லாமே இல்லாமல் ஆகிவிட்டது என சிலர் கருதுகின்றமை அவர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளிலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

லக்ஸ்மன் கதிர்காமர், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி போன்றவர்கள் தமிழர்களுக்கு விரோதிகளாகவும் துரோகிகளாகவும் கடந்த காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டனர். காலப்போக்கில் அவர்களோடு கருணாவும் இணைந்துகொண்டார். விடுதலைப் போராட்டக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட பின்னர் கே.பி நன்கு திட்டமிடப்பட்ட இராஜதந்திரம் மூலம் சிறிலங்கா அரசுடன் இணைந்துகொண்டார். மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் என வெளியே கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் அவர் தானாகவே சிங்கள அரசுக்கும் புலனாய்வுத்துறைக்கும் துணைபோனார் என பின்னர் அறியப்பட்டது.

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல்கள் கடற்பரப்பில் வைத்து தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கும் கே.பிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்களை மக்கள் மத்தியில் மறுப்பதற்கு முடியாத அளவு அவரது தற்போதைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என பல தனிப்பட்ட நடைமுறைகள் - குணவியல்புகள் - உள்ளன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றும் புலிப் போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்களுக்கு அந்த நடைமுறைசார் குணவியல்புகளும் இயல்பாகவே தோற்றம் பெறும். எதிரியிடம் அகப்பட்டால், அவர்களின் சித்திரவதைகள் மூலம் இரகசியங்கள் வெளிவரக்கூடாது என்பதற்காகவே புலிகள் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்தனர். சயனைட் குப்பிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் கத்திகளால் தங்கள் கழுத்துக்களை அறுத்துக்கொண்டும், ரவைகளைப் பயன்படுத்தியும் அவர்கள் தமது உயிர்களை இந்த வீர மண்ணுக்காகத் தியாகம் செய்தனர்.

விழுப்புண் அடைந்திருந்தபோது, எழுந்து நடக்க முடியாத பல போராளிகள் தமது சக நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு கத்தியை எடுத்துக்கொடுத்து தமது கழுத்தை அறுத்துவிட்டுச் செல்லுமாறு, அல்லது துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் செல்லுமாறு பணித்து, அப்படி நடைபெற்ற பல சம்பவங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்றிருக்கின்றன. இப்படியாக இரகசியங்கள் பாதுகாக்கப்பட்ட போராட்ட அமைப்பிற்குள் தங்களை இணைத்திருந்த தயாமோகன், கே.பி, ராம், அமுதன், நகுலன் உள்ளிட்டவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்ற துரோகத்தனத்தை எந்தவொரு தமிழ் மக்களாலும் மன்னிக்க முடியாது.

கடந்த மாவீரர் தினத்தன்று (27.11. 2017) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டவர் தயாமோகன் குழுவினர் என்பது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கே.பியுடன் சேர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, அவரது தலைமையைக் கொச்சைப்படுத்திய தயாமோகன் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள என்ன தகுதி உடையவர்கள்? அவர்களுக்கு அந்த அதிகாரத்தை, அந்த உரிமையை வழங்கியது யார்? இந்தக் கேள்விகள் தமிழர் தாயகத்தில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்களிடம் எழுந்துள்ளன.  கடந்த மாவீரர் தின உரை என்ற பெயர் அறிக்கை வெளியிட்டது இந்த மோசடிக் கும்பல்தான் என்பதை அறிந்த மேற்படி தேசிய செயற்பாட்டாளர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். பண்டை வீரத் தமிழர்களின் வழிவந்த துரோகிகளான காக்கைவன்னியன், கருணா போன்று கே.பி - தயாமோகன் குழுவினர் மேற்கொண்டுவரும் துரோகத்தனத்திற்கு முடிவுகட்டவேண்டும் என அவர்கள் ஆக்ரோசமாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் அதீத ஈடுபாடுடைய எந்தவொரு விடுதலைப் போராளியோ உண்மையான தேசியச் செயற்பாட்டாளரோ தேசியத் தலைவருக்கோ போராட்டத்திற்கோ துரோகம் இளைக்க விரும்பமாட்டார்கள். அப்பளுக்கற்ற விடுதலைப் போராட்டத்தில் அழுக்குப் படியவைக்க முயலும் இவர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டவேண்டும்.  சிங்கள அரசின் சலுகைகளைப் பெற்று, அவர்களின் கைக்கூலிகளாக மாறியிருக்கும் மேற்படி துரோகக் கும்பலை மக்கள் முன் நிறுத்த வேண்டும். எதிரிகளை மன்னிக்கலாம் துரோகிகளை மன்னிக்க முடியாது என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க விடுதலைப் போராட்ட விரோதிகளான இவர்களை சமூகத்தின் முன் அடையாளம் காட்டவேண்டும்.

சிங்கள அரசின் கைப்பொம்மைகளாக இருந்து, தமிழினத்தின் விடுதலைப் பயணத்திற்கு தடைகளைப் போடுகின்ற எவராயினும் அவர்கள் துரோகிகளே. அவர்களின் முகத்திரைகளைக் கிழிப்பதற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளவர்கள் உரிய ஆதரவையும் அனுசரணையையும் வழங்கவேண்டும். தமிழர்களின் விடுதலைத் தீயை அணையாமல் பாதுகாப்பதற்கு தாயகத்திலும் பன்னாடுகளில் வசிக்கின்ற ஒவ்வொறு தமிழ் மக்களும் உறுதிபூணவேண்டும்.

நன்றி: ஈழமுரசு

தொடர்புடைய செய்தி:

கே.பியே தனது தலைவர் என்று அறிவித்த தயாமோகன் தயாரித்த ‘தலைமைச் செயலக’ அறிக்கை! ஒலிப்பதிவு ஆதாரம்!