ஆஸ்திரேலியாவின் உயர் பாதுகாப்பு முகாம் மூடப்படுகின்றதா?

ஞாயிறு சனவரி 06, 2019

மெல்பேர்ன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இரு ஆஸ்திரேலிய நகரங்களில் செயல்பட்டு வந்த இரண்டு உயர் பாதுகாப்பு முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளை சிறை வைக்கும் இந்த முகாம்களை மூடுவதன் மூலம் சுமார் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மிச்சப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மெல்பேர்னில் செயல்பட்டு வந்த தடுப்பு முகாம் 

இந்த வாரம் மூடப்பட்ட நிலையில், சிட்னியில் உள்ள தடுப்பு முகாம் விரைவில் மூடப்பட இருக்கின்றது.

இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வந்த 9 தடுப்பு முகாம்களில் 2 முகாம்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. 

படகு வழியாக வர முயற்சித்த தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தியதில் கிடைத்த வெற்றியின் காரணமாக இந்த முகாம்கள் மூடப்படுவதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் கூறியுள்ளார். 

அதே சமயம், முகாம்களை மூடும் அரசின் நடவடிக்கையை திசைத்திருப்பும் செயல் என தொழிலாளர் கட்சி விமர்சித்திருக்கின்றது.

இந்த முகாம் இரண்டு ஆண்டுக்குள் மூடப்படும் என கடந்த மே 2016ல் முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது