ஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி!

வெள்ளி டிசம்பர் 14, 2018

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தேதி அறிவித்தபொழுது உங்கள் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள் எனது அன்பு பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும் என்கிறார் ஹரிஷ்ணா பெருமையோடு

உயர்தர தேர்வில் ஒவ்வொரு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரினால் கௌரவிக்கப்படுவது மரபு. அதற்கமைய இவர்களிற்கான பாராட்டு விழா புதன்கிழமை (12/12/18) அன்று UNSW பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சான்றிதழ்களை பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்திருந்தார். வீட்டிலும், வெளியிலும் தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என இளையோர்களிற்கு அறிவுரை கூறும் இவர், தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோர்களிற்கும் நன்றிகளை கூறத் தவறவில்லை. 

தனது நண்பர்களும், ரகுராம் ஆசிரியரும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் இந்த நிலையில் நிற்பதாக பெருந்தன்மையோடு கூறுகின்றார். மாநிலத்தில் தேர்வு எழுதிய 32மாணவர்களில் 20பேர் அதியுயர் சித்தி பெற்றது பெருமையானா விஷயம். பாடசாலைக்கு அப்பால் பிரத்தியேகமாக இலவச தமிழ் வகுப்புக்களை உயர்தர மாணவர்களிற்கு நடாத்திய ஆசிரியர் நவரட்ணம் ரகுராமால், ஒன்பது மாணவர்களில் இருவர் முதலாம், இரண்டாம் இடங்களில் வந்திருப்பதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் அதியுயர் சித்தி பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.