ஆஸ்திரேலிய போலீசார் அதிரடி!

புதன் டிசம்பர் 05, 2018

கடந்த ஆகஸ்டு மாதம் ஆஸ்திரேலியா நாட்டின் நியூசவுத் வேல்ஸ் மாகாண பல்கலைக்கழக வகுப்பறையின் மேஜை ஒன்றில் ஒரு நோட்டு புத்தகம் கிடந்தது. அதில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பது தொடர்பாக குறிப்புகள் இருந்தன. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல், முன்னாள் மந்திரி ஜூலி பிஷப் மற்றும் சிட்னி நகரில் உள்ள பிரபல துறைமுக பாலம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நோட்டு புத்தகத்தை ஆராய்ச்சி மாணவரான முகமது கமெர் நிஜாமுதீன் என்பவர் வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஏனென்றால் போலீசார் கைப்பற்றிய நோட்டு புத்தகம் நிஜாமுதீன் அமரும் இருக்கைக்கு அருகே கிடந்துள்ளது.இதையடுத்து கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் 4 வாரங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்று தெரியவந்ததால் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது.

எனினும் தலைவர்கள் மீதான தாக்குதல் பட்டியலை தயாரித்தவர் யார், அதை பல்கலைக்கழக வகுப்பறைக்குள் எதற்காக கொண்டு வந்து வைத்தனர்? என்பது பற்றி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவின் அண்ணனான 39 வயது அர்சலான் கவாஜாவை சிட்னி புற நகரில் நேற்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர் ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிஜாமுதீனின் நண்பர் ஆவார். கைது செய்யப்பட்ட அர்சலான் கவாஜா விசாரணைக்காக அங்குள்ள பர்ரமட்டா போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு அர்சலான் கவாஜா திட்டமிட்டு இருக்க மாட்டார் என்றும், அவருடைய நண்பர்களால் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஆஸ்திரேலிய போலீசார் நம்புகின்றனர்.மாணவி ஒருவர் உடனான காதல் போட்டியில் இதுபோல் வேண்டுமென்றே போலி தாக்குதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். எனினும் தாக்குதல் பட்டியலை வைத்திருந்தது தொடர்பாக அர்சலானிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று நியூசவுத் வேல்ஸ் மாகாண பயங்கரவாத தடுப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நாளை(வியாழக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் அண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது, அந்நாட்டில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.