இதுவரை கைதுசெய்யப்படவில்லை!

Thursday November 08, 2018

கடந்த 28ஆம் திகதி கனிய வள அமைச்சில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய, எந்தவொரு நபரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையென்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவமானது தன்னால் அல்லது தனது மெய்பாதுகாவலர்களால் முன்னெடுக்கப்படவில்லையென்றும், குறித்த சம்பவத்துக்கு நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட வெளியிலிருந்து வந்தவர்களுமே காரணமென, சீ.சீ.டி.வி கமரா காட்சிகள் மூலம் நன்றாகத் தெளிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணமே, தன்னுடைய மெய்பாதுகாவலர் என்று தெரிவித்துள்ள அர்ஜுண இன்று தான் வெளியில் இருக்கும் நிலையில், தன்னுடைய மெய்பாதுகாவலர் சிறையில் இருப்பதாகவும், அந்த சம்பவத்துக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் எவரும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.