இது முடிவல்ல ஆரம்பம் தமிழர்களைக்கண்டு ஓடிஒளியும் தமிழர் தலைமைகள்!

திங்கள் செப்டம்பர் 28, 2015

சிறீலங்காவின், தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமும், இனவழிப்பும் சர்வதேசத்தின் காதுகளிற்கு எட்டியிருக்கும் முக்கிய தருணம் இது. இலங்கைத் தீவில்  தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், பாரபட்சமற்ற எறிகணைத் தாக்குதல்கள், நீதிக்கும் மனிதத்திற்கும் எதிரான படுகொலைகள், கொடூரமான சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்பன சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தட்டித் திறந்துள்ளன. சிங்களத்தின் போர்க்குற்றங்கள் பல உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையானது, இராணுவத்தினரின் தடுப்பில் வைக்கப்பட்டோர் மீது நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், மற்றும் படுகொலைகளை நிரூபித்து நிற்பதாகவும், இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளிலும், மற்றும் சோதனைச் சாவடிகளிலேயே காணாமற்போதல்கள் நடந்துள்ளதகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் மற்றும் பாலியல் சார்ந்த வன்முறை, காணாமற்போதல்கள், சித்திரவதைகள், மனதாபிமான உதவிகள் தடுக்கப்படல், சிறுவர் ஆட்சேர்ப்பு, பொதுமக்கள் மற்றும் பொது உடமைகளின் மீதான தாக்குதல்கள், மற்றும் முள்வேலிக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டோர் மீதான இராணுவத்தின் கொடுஞ்செயல்கள் என பகுதி பகுதியாக ஐ.நாவின் அறிக்கையானது, இனப்படுகொலையின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டு நிற்கின்றது. இந்த விசாரணையானது ஒரு முடிவல்ல, நீதிக்கான தேடலின் ஆரம்பம் என ஐ.நாவின் பேச்சாளர் தெரிவித்திருப்பது நீதிக்கான சர்வதேசத்தின் குரல் மிகத் தொலைவில் கேட்கத் தொடங்குவது போலான ஒரு நம்பிக்கை ஒளியைத் தந்துள்ளது.

 

சர்வதேசமும், மனித உரிமைகள் பேரவையும், தமிழர்கள் மீதான, சிங்களப் பேரினவாதிகளின் குற்றங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டிருக்க, தமிழினத்தின் கொள்ளிக்கட்டையாக, சம்பந்தனின் சிங்கள விசுவாசத்தின் வாலாட்டியாக, சுமந்திரன், சிங்களத் தரப்பைக் காப்பாற்ற, ஐ.நா நோக்கி வாலாட்டிக் கொண்டு வந்துள்ளார். இலங்கைத் தீவில் இனப்படுகொலை என்ற ஒன்றே நடக்கவில்லை என்று வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல, மல்லுக்கட்டி நின்றுள்ளார். தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில், வேடமிட்டு வந்திருக்கும் இவர்கள், தமிழர்களின் முன்னால் வரக்கூடத் தகுதியற்று பின்கதவால் தப்பிச் சென்றுள்ளமை தாங்கள் வேடதாரிகள் என்பதை தாங்களே அம்பலப்படுத்தியுள்ளனர்.

 

தமிழ் மக்கள், படையணியாகத் திரண்டு ஐ.நா முன்றலில் திரண்டிருந்த சமயம், தமிழரின் விடுதலைக் கனவிற்கும், தமிழர்களுக்கான இனப்படுகொலைக்கான நீதிக்கும் ஒருசேரக் கொள்ளிவைக்க வந்த சுமந்திரன், அந்த நாட்டிலேயே இல்லாது தப்பிச் சென்றுள்ளார். தமிழ் மக்களின் முன்னாலேயே வர அஞ்சும் இவர்கள், எப்படித் தமிழர் தலைமைகள் எனத் தங்களை இனங்காட்டிக்கொள்ள முடியும்? தாய்த் தமிழக உறவுகள், உணர்ச்சியின் கொதிப்பிழம்புகளாக, எம் இனத்தின் உயிர்வலியைச் சர்வதேசத்திற்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருந்த சமயம், சிங்களத்திடம் தமிழினத்தை அடகு வைத்துவிட்ட, இந்தத் ‘தமிழர் தலைமைகள்’ ஓடி ஒளிந்து கொண்டன.

 

ஆனால், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலமும், உத்வேகமும் சிங்களத்தின் தொடர்ச்சியான தமிழினப் படுகொலையின் சாட்சியமாக, துணிந்து நின்று கூறும் வாக்குமூலங்களும், சர்வதேசத்தின் காதுகளில் மேலும் மேலும் சென்று சேரும்போது, எம் இனத்தின் விடுதலையின் கதவுகள் மெதுவாகத் திறந்து கொள்ளும் என்பது உறுதி. சர்வதேச சமூகத்தின் விசாரணைகளில், பாதிக்கப்பட்ட தமிழினம், சிங்களப் பேரினவாதத்தினை விசாரிக்கக்கூடிய சக்தியாகத் தகுதிபெறும் நிலைக்கு மாற்றமடையவேண்டும். தங்கள் வாழ்விட நாடுகளின், அரசுகளிடம் தமிழர் தரப்பு, குற்றவாளிகளை விசாரிக்கக்கூடிய ஒரு தேசிய இனம் தாங்கள் என்பதை வலியுறுத்தி நிற்கவேண்டும்.

 

எப்படி ஐ.நாவினால் அங்கீகரிக்கப்படாத, பலஸ்தீனம், மற்றும் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஹமாஸ் அமைப்புக்கு,  இஸ்ரேலுடனான போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களைத் தாமே விசாரிக்கும் தகுதியைச் சர்வதேசம் வழங்கியதோ, அதைவிட மேலான தேசிய இனமான தமிழினம், தாமே தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான குற்றங்களை விசாரிக்கும் தரப்பாக உயர்த்தப்படல் வேண்டும். புலத்திலும் தாயகத் தமிழீழத்திலும்,  தாய்த் தமிழகத்திலும் ஒன்றுபடும் தமிழர் பலம், தமிழ்த் தேசியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு, சிங்களத்திற்கு வாலாட்டும், தமிழினத்தின் நச்சுக்களான சம்பந்தன், சுமந்திரன் போன்ற ‘தமிழர் தலைமைகளை’ மீண்டும் புற்றுக்குள் நிரந்தரமாகப் பதுங்கச் செய்யும்.

 

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு