இந்தியாவில் குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 அபராதம் ?

செவ்வாய் ஜூலை 26, 2016

இந்தியாவில் , மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு தண்டனை மற்றும் அபராதம் படிப்படியாக கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இதில் முதல்முறை பிடிபடுவோருக்கு ரூ.2,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை, இரண்டாவது முறையாக சிக்குபவர்களுக்கு ரூ.3,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மூன்றாவது முறையாக பிடிபடுவோருக்கு 10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் அபராதம், சிறை தண்டனை ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் இடமுள்ளது.

இதுபோல் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறையாக ரூ. 400, இரண்டாவது முறையாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பெல்ட் அணியாமல் இலகு ரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.300 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறாத சிறார்கள் வாகனம் ஓட்டினால் அதற்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சிறார்களை குற்றம் செய்யத் தூண்டியதாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இத்துடன் குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும். இந்த புதிய விதிமுறைகள், அனைத்து மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது.