இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க முடியாது. மோடி அரசு அறிவிப்பு.

சனி ஜூலை 30, 2016

இந்தியாவில்  மரண தண்டனையை ஒழிப்பதற்கு அரசு விரும்பவில்லை என்று ராஜ்யசபாவில் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பான தனிநபர் தீர்மானத்தை ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கொண்டு வந்தார். அதன் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராயும் நேற்று பேசுகையில், மரண தண்டனை ஒழிக்கப்படுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். 

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், குற்றங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கீழ்த்தரமான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மரண தண்டனையால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது என்றார். அவரது கருத்தை ஆதரித்து திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், இந்தியா, அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட 36 நாடுகள்தான் மரண தண்டனையை அமல்படுத்துகின்றன என்றார். 

எம்.பி.க்களின் கருத்துக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், நாட்டில் தற்போதுள்ள சூழலானது மரண தண்டனையை ஒழிக்கும் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. ஒரு வழக்கில் கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் அதனால் பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். 

அங்கு அவரது முயற்சி தோற்றாலும் அவர் மாநில ஆளுநரையும் ஜனாதிபதியையும் அணுகலாம் என்றார் கிரண் ரிஜிஜு. அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு டி.ராஜாவிடம் ரிஜிஜுவும், ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியனும் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க டி.ராஜா மறுத்து விட்டார். அதன் பின் அவரது தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் சபையில் நிராகரிக்கப்பட்டது.