இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் டெண்டுல்கர்!

Thursday June 07, 2018

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தார். இந்நிலையில், அவர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.