இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சல்மான் கான் முதல் இடம்!

Friday December 22, 2017

உலக கோடீஸ்வரர்களை பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை கணிப்பின்படி ஓராண்டில் ரூ.232.83 கோடி வருமானத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

உலக கோடீஸ்வரர்களை பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் 100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக் கானை பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டு சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

சினிமா படங்களில் நடித்தது தவிர, பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் கடந்த 1-10-2016 முதல் 30-9-2017 வரை சல்மான் கான்(51) 232 கோடியே 83 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ள ஷாருக் கான் 170.05 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 100.72 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். 

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பின்னர் பேட்மின்டன் வீராங்கனை பிவி.சிந்துவின் வருமானம் 17 மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு விளம்பரங்களில் தோன்றியதன் மூலம் இவர் 57.25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

இந்த பட்டியலில் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ள ஒரே பெண் என்ற வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா 68 கோடி ரூபாய் வருமானத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.