இந்தோனேசியாவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய ஆட்கடத்தல்காரர்!

Saturday November 03, 2018

ஆட்கடத்தல் குற்றத்தில் இந்தோனேசிய நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சிப்ரியானஸ் கொபோங் என்ற 59 வயது நபரை, நீண்டகாலத்துக்கு பிறகு இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கரா மாகாண காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகாலமாக கொபோங்கை தேடி வந்த  காவல்துறை, தலைமறைவாக இருந்த அவரை டென்கரா மாகாண தலைநகரான குபாங்கில் வைத்து கைது செய்துள்ளது. 

2014ம் ஆண்டு ஆட்கடத்தல் வழக்கொன்றில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை  பெற்ற இவர்,  நுசா டென்கரா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான மக்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் வேலையில் இவர் ஈடுபட்டிருந்துள்ளார். அதில் பெரும்பாலும் பெண்களை கடத்தியிருக்கிறார். 

இந்த நபர், மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வேலைக்கு ஆட்களை கடத்தும் ஏஜெண்ட்டாக இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 இக்கைதை வரவேற்றுள்ள நீதி மற்றும் அமைதிக்கான சேவை மையத்தின் இயக்குனர் கோவா சோலா, “ஆண்டுதோறும் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டென்கராவிலிருந்து மலேசியாவுக்கு 2,000 த்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கடத்தி செல்லப்படுகின்றனர்” என பதிவு செய்துள்ளார். 

கடந்த பத்து மாதங்களில் 90 பேரின் உடல் மலேசியாவிலிருந்து இம்மாகாணத்துக்கு வந்துள்ளதாக கூறுகிறார் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மரியா ஹிங்கி. இவர்கள் முறையான பதிவின்றி மலேசியா செல்ல முயன்றவர்கள் எனப்படுகின்றது. 

கிழக்கு நுசா டென்கரா, இந்தோனேசியாவில் கிறிஸ்த்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாக விளங்குகின்றது.