இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன்!

Monday September 03, 2018

இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் எனப் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். 

வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி.பிரகாஷ், பொல்லாதவன், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம் என ஏராளமான  திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். டார்லிங், பென்சில், நாச்சியார் போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். 

தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் பாதை அமைப்பின் சார்பாக நடந்த தமிழ் கையெழுத்து இயக்க விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் உடன் நேற்று கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக தான் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் என உறுதியேற்றுள்ளார். அது தொடர்பாக தன் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் செய்தியொன்றையும் வெளியிட்டிருக்கிறார். 

அந்தப் பதிவில் ` உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... தமிழ்விதியெனசெய்` எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தன் பெயரின் முன்னெழுத்தையும் தமிழ்ப்படுத்தி கோ.வெ.பிரகாஷ்குமார்  எனக் கையெழுத்திட்டு புகைப்படம் ஒன்றையும் பதிந்திருக்கிறார் அவர்.