இன்று உலக புத்தக தினம்!

சனி ஏப்ரல் 23, 2016

இன்று புத்தக தினம். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி புத்தக தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

புத்தகங்கள் படித்துப் பாதுகாக்கப்படவேண்டியன. ஏனென்றால் கடந்த கால வரலாற்றையும், இன்றைய நிகழ்வுகளையும், செய்திகளையும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசேர்க்க எழுதினூடாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களே புத்தகங்களாகும்.

பாரீஸ் நகரில் 1995-ம் ஆண்டு ஓகஸ்ட்  மாதம் 25ஆம் திகதி முதல் நவம்பர் 16ஆம் திகதி வரை நடந்த யுனெஸ்கோவின் 28 ஆவதுமாநாட்டில் ”அறிவை பரப்புவதற்கும் உலகமெங்கும் உள்ள பல்வேறு கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும் புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்” என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அத்துடன், உலகின் சிறந்த இலக்கிய மேதையான சேக்ஸ்பியரின் பிறந்தாள் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஆகும். அவரது பிறந்த நாள் அன்று புத்தக தினத்தைக் கொண்டாடுவது சிறப்பானதாகும் என யுனெஸ்கோ மாநாட்டில் முடிவெடுக்கப் பட்டது.

அன்றிலிருந்து ஏப்ரல் 23ஆம் திகதி நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

விதைக்குள் விருட்சம் போல் ஒரு சமூகத்தின் எழுச்சிக்கான கருத்துகளை சில புத்தகங்கள் தன்னுள் கொண்டிருக்கின்றன. அதனால் தான் ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு என்கிறார் கார்லைஸ் எனும் அறிஞர். ”துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்” என்று கூறி இருக்கிறார் மார்ட்டின் லூதர்கிங். ஆகவே நாமும் இந்நாளில் புத்தகங்களை வாசிப்போம்; நேசிப்போம்; எனச் சபதமெடுப்போம்.