இன்று சர்வதேச தாய்மொழி தினம்!

Wednesday February 21, 2018

இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. மொழியியல் பல்வகைமையும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கான பன்மொழிச் சூழலும் என்பதே இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952 ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பெப்ரவரி 21 ஆம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998 இல் முன்மொழிந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலித்த UNESCO அமைப்பு 1999 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து, 2000 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மொழியெனும் அடையாளம்

 சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். மொழியின்றி சிந்தனை கிடையாது. சிந்தனையற்ற மனித குலம் நாகரிகம் கண்டிருக்காது.

 ஒருவர் மற்றவருடனான தொடர்பை ஏற்படுத்தவென உருவான மொழிகள் பின்னாளில் இனத்தின் அடையாளமாகின. 
உலகில் 6500 மொழிகள் இருப்பதாகப் பலர் நம்பினாலும், உண்மையில் 7106 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 

 எவ்வாறாயினும், மொழிகளின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறுவது அரிது. ஒரிரு தலைமுறைகளில் அழிவைச் சந்திக்கவுள்ள மொழிகளும் உள்ளன. ஏற்கனவே வழக்கொழிந்த மொழிகளும் உள்ளன. பேச்சு வழக்கில் மாத்திரமுள்ள மொழிகளும் உள்ளன. 

 தலைமுறை தாண்டி வாழும் மொழிகள் 

 மக்களின் வாழ்வியலோடு கலந்து, அனுபவங்களினூடே வார்தைகளை உருவாக்கி, இலக்கணங்களால் நேர்த்தி கண்டு, இலக்கியங்களால் செழுமையுற்ற மொழிகள் தலைமுறைகளால் கடத்தப்பட்டு, காலத்தால் நிலைத்து நிற்கின்றன. 
 இங்கே தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுகளும் இல்லை, புறக்கணித்து வளர்ந்த நாடுகளும் இல்லை.

கண்டுபிடிப்பாளர்கள் பலரும் தமது தாய்மொழியில் கற்றவர்கள் தான். சிந்தனையோட்டம் செழுமையுற தாய்மொழிக் கல்வியே சிறந்ததென ஆய்வுகள் பலவும் எடுத்தியம்புகின்றன.

 காலத்தால் மாற்றங்களுக்குள்ளாகி, புதியனவற்றோடு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழியே யுகங்கள் கடந்தும் வாழும்.

 தமிழெனும் வளர்மொழி

 தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழியென்றான் எம் முப்பாட்டன் பாரதி.

நண்பர்களுக்காவும் புரிதலுக்காகவும் வணிகத்திற்காகவும் நாம் எத்தனை மொழிகளைக் கற்றாலும், நமது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் தொலைக்காமல் இருக்க, தமிழில் கற்று, அடுத்த சந்ததிக்கு கடத்தி, அதனைக் காலத்தால் அழியாமல் காப்பது எம் தலையாய கடமையாகும்.

 செறிவான கலாசாரக் கூறுகளைக் கொண்ட உலகின் ஆறு மொழிகளில் எம் தாய்மொழி தமிழுக்கும் இடமுண்டு. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி, இன்று காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு இளமையுடன் திகழ்கிறது.