இன்று சர்வதேச பூமி தினம்!

வெள்ளி ஏப்ரல் 22, 2016

சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய ஒரேயொரு கோள் நமது பூமியாகும். அதனைப் பேணிப் பாதுகாக்கவேண்டியது எமது ஒவ்வொருவரதும் கடமையாகும். எமது பூமியைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல். அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அத்தோடு ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடாத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175க்‍கும் மேற்பட்ட நாடுகளில் புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

‘இயற்கையின் சமநிலை பாதிக்‍கப்படும்போது, அது எப்படியாகிலும் தன்னை சீரமைத்துக்‍ கொள்ளும். ஒரு மனிதனால் அதற்கு ஆபத்து உண்டாகுமேயானால், அது அவனை திருப்பித் தாக்‍க சற்றும் தயங்காது. அப்போது, இளம்மஞ்சள் நிறம் கொண்ட ஒரு செம்பருத்திப் பூவைவிட, ஒரு மைக்‍கேல் ஏஞ்சலோவோ, ஒரு ஷேக்‍ஸ்பியரோ, ஒரு மொசாட்டோ இயற்கைக்‍கு முக்‍கியமல்ல. ஏனென்றால், இயற்கை அன்னைக்‍கு செல்லக்‍குழந்தைகள் என்று யாரும் இல்லை.’

இப்படித்தான் Vanishing Species என்ற தனது புத்தகத்தின் முன்னுரையில் தெள்ளத்தெளிவாக அதே நேரம் வெகு சுருக்‍கமாக எடுத்துச் சொன்னார் அதன் ஆசிரியர் ரோமன் கிரே, இதனை இந்த பூமி தினத்தில் நாம் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்‍கும். ஏனென்றால் இந்த பூமிதான் நமக்‍கு சாமி, எதிர்கால சந்ததியினருக்‍கு இப்பூவுலகை பத்திரமாக விட்டுச் செல்ல சபதமேற்போம். பூமிக்‍கு காவல் நிற்போம்.