இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியின் முக்கிய அம்சம் நீக்கம்!

Tuesday March 13, 2018

இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருந்த மிகமுக்கிய அம்சம் திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் முக்கிய சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிஃபி (GIF) அம்சம் நீக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு இனவெறியை தூண்டும் வகையிலான ஜிஃப் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த அம்சம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'எங்களை மன்னித்து விடுங்கள். இதுபோன்ற ஜிஃப் ஸ்னாப்சாட்டில் இடம்பெற்றிருக்க கூடாது. ஜிஃபியுடன் இணைந்து இந்த ஜிஃப் நீக்கப்படுவதற்கான பணிகளை எங்களது குழுவினர் துவங்கியுள்ளனர்.' என ஸ்னாப்சாட் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 'குறிப்பிட்ட ஜிஃப் செயலியில் இருந்து நீக்கப்படும் வரை ஜிஃப் வசதியை நீக்குகிறோம்.' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜிஃப் அனிமேஷன் லைப்ரரியில் இனவெறியை தூண்டும் ஜிஃப் முதலில் இங்கிலாந்தை சேர்ந்த 21 வயது ஸ்னாப்சாட் பயனர் கண்டறிந்திருக்கிறார். குறிப்பிட்ட ஜிஃப் கருப்பு இன மக்கள் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் இறப்பதற்கு காரணமாக அமைகின்றனர் என்ற வாக்கில் அமைந்திருக்கிறது. 

இதேபோன்ற ஜிஃப் முன்னதாக ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. 'இதுபோன்ற தகவல்களுக்கு இன்ஸ்டாகிராமில் இடமில்லை. இந்த விவகாரம் குறித்த விசாரணை நிறைவுறும் வரை ஜிஃபியுடனான எங்களது கூட்டணியை நிறுத்திக் கொள்கிறோம்.' என இன்ஸ்டாகிராம் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் ஜிஃபி சேவை மூலம் ஜிஃப் பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தும் அனிமேஷன் ஜிஃப் இரண்டு முக்கிய செயலிகளில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அதன் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.