இயேசு பிறந்த பெத்லகேமில் கோலாகல கொண்டாட்டம்

ஞாயிறு டிசம்பர் 25, 2016

உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அவ்வகையில், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதியான இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இன்று அந்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதானை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்தனர்.

அங்கு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ராட்சத கிறிஸ்துமஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். இது கிறிஸ்துவின் நிலம், அமைதியின் பூமி. இங்கு நிற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று ஒரு வெளிநாட்டு பயணி புல்லரிப்புடன் கூறினார். பிறந்த

முன்னதாக நேற்று, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை உடுத்திய சிறுவர்-சிறுமியர் வானவேடிக்கைகளை கண்டு களித்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக்களை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர்.

இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.