இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டி!

ஞாயிறு ஏப்ரல் 15, 2018

கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று புகழேந்தி கூறியுள்ளார்.  மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் புகழேந்தி. தற்போது இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக உள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலையொட்டி பெங்களூருவில் தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் அவைத்தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. இதில் புகழேந்தி, உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நாங்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டோம். எங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரால் மட்டுமே நீக்க முடியும். அவர் மறைந்து விட்டதால் எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பொறுப்புகளை உருவாக்கி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்சியின் விதிமுறைகளை மீறி புதிய பொறுப்புகளை உருவாக்கிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.

கர்நாடக மாநில சட்டபேரவைக்கு வரும் மே 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலம் முதல் தற்போது வரை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கழக பொதுச்செயலாளராக இருந்தபோது கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார்கள்.

அவர்கள் வழியில் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூருவில் உள்ள காந்திநகர், சாந்திநகர், சிக்கபேட்டை, புலிகேசிநகர், சிவாஜிநகர், ஆளேகல், சி.வி.இராமன்நகர், கோலார் மாவட்டத்தில் உள்ள தங்கவயல், பங்காருபேட்டை, ஷிவமொக்கா மாவட்டத்தின் ஷிவமொக்கா நகரம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவோம். மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மாநில கழகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. கழகம், கழக கொடி ஆகியவை யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் அ.இ.அ.தி.மு.க. என்ற பெயரை தமிழகத்தில் மட்டுமே டி.டி.வி. தினகரன் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதே தவிர, பிற மாநிலங்களில் இயங்கி வரும் கழகத்தற்கு அந்த தடை பொருந்தாது என்பதால், கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெயரில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

புகழேந்தியின் இந்த அறிவிப்பு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்களுக்கு கர்நாடகாவில் இரட்டை இலை சின்னம் கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் அளிக்க அ.தி.மு.க. முடிவு செய்து உள்ளது.