இரட்டையர் திருமணம்!

Tuesday August 07, 2018

அமெரிக்காவில் இரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராக பிறந்த இரண்டு பெண்களுக்கும், இரட்டையராக பிறந்த இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இரட்டைய தின விழாவில், இரட்டையரான பிரிட்டானி மற்றும் பிரையானா டியான்(32) ஆகிய சகோதரிகள், இரட்டை சகோதரர்களான ஜோஷ் மற்றும் ஜேர்மியை(34) சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு ஒருவரையொருவர் பிடித்துப் போய் விட்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த வாரம் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து இரட்டையர் சகோதரிகளில் ஒருவரான பிரிட்டானி கூறுகையில்,

இரட்டையராகப் பிறந்த நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். ஆரம்பத்தில் இரட்டையராகப் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஆனால், எங்களால் எங்கோ பிறந்த இரு வெவ்வேறு ஆண்களிடம் பழகவே முடியவில்லை. அவர்களால் இரட்டையரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் தான் எங்களைப் போலவே இரட்டையர்களாக பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம்.

அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. கடந்த ஆண்டு இரட்டையர் தின விழா நடைபெற்றது. அதில் நாங்கள் பங்கேற்றோம். அங்கேதான் இந்த இரட்டையரை (ஜோஷ், ஜேர்மி) சந்தித்தோம். பார்த்த உடனே இவர்களைப் பிடித்துவிட்டது. அவர்களுக்கும் எங்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டதாக கூறினார்கள். அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு, எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.

தேவதைக் கதைகளில் வரும் திருமணத்தைப் போன்று அழகாக நடைபெற்றது எங்களது திருமணம். நாங்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசிக்க போகிறோம்’ என தெரிவித்துள்ளார்.