இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? சீமான்

வெள்ளி சனவரி 11, 2019

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை கிடைக்கப் பெறாத நிலையில்.

தமிழக அரசு வாய்மூடி மௌனியாகக் கிடக்கிறக் கொடுமை ஒருபுறமிருக்க, தற்போது புழல் சிறையிலுள்ள தம்பிமார்கள் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரைச் சந்திக்கச் சென்ற தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் தம்பி களஞ்சியம் உள்ளிட்டோருக்கு அனுமதி மறுத்திருப்பது எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
 
சிறைவாசிகளின் நேர்காணல் சந்திப்பு என்பது அவர்களுக்குரிய அடிப்படை உரிமை. அதனை சட்டமே அங்கீகரித்து வரையறுக்கிறது. அவ்வுரிமையைக் காரணமின்றி நிராகரிப்பது என்பது சிறைவாசிகளின் உரிமையை மறுக்கும் உரிமை மீறல்.

அந்தவகையில் புழல் சிறைக்குத் தம்பிமார்களை சந்திக்கச் சென்ற தம்பி களஞ்சியம் உள்ளிட்டோரைப் பல மணிநேரம் காக்க வைத்துத் திருப்பி அனுப்பியிருப்பதன் உள்நோக்கத்தைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.