இரவல் தியாகத்தில் ஒய்யாரக் கொய்யகம் - பிலாவடிமூலைப் பெருமான்

செவ்வாய் டிசம்பர் 25, 2018

வணக்கம் பிள்ளையள். ‘எப்படி, எல்லோரும் சுகமாக இருக்கிறியளோ?’ என்று உங்களிட்டை கேட்கிறதுக்கு எனக்கு மனசில்லை. ஏனென்றால் நானே இப்ப கொஞ்ச நாளாக சரியான வருத்தத்தோடு தான் இருக்கிறன்.

 

இந்தக் கிழட்டு வயதில், அதுவும் பாடையில் ஏறுகிற வயதில் உந்த நைன்ரி வருத்தம், துன்பம் இல்லாமல் இருக்க முடியுமே என்று நீங்கள் குசுகுசுக்கிறது எனக்கு விளங்குது. உண்மையைச் சொல்லப் போனால் பாருங்கோ எனக்கு உடலில் பெரிசாக எந்த வருத்தமும் இல்லை. மனதில் தான் தாங்க முடியாத வருத்தம். அதுவும் நடக்கின்ற கூத்துகளைப் பார்க்கேக்குள்ளை ஒரே அழலாகத் தான் எனக்கு இருக்கின்றது.

 

அது ஒரு பொற்காலம் பாருங்கோ. ஒவ்வொரு வருசமும் மாவீரர் நாள் நெருங்க நெருங்க ஒருபக்கம் மனசுக்குள் மாவீரர்களின் தியாகங்களை நினைச்சுக் கண்ணீர் வடிச்சாலும், தலைவரின்ரை மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை வரும் என்ற எதிர்பார்ப்போடை காத்திருப்பம். அந்த நாள், அந்த நேரம் அவர் திரையில் தோன்றி ‘எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே’ என்று சொல்லும் பொழுது வருகின்ற உற்சாகம் பாருங்கோ, எவன் வந்து உரையாற்றினாலும் ஏற்படாது. அவர் ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க, உச்சரிக்க, நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி நிற்கும். இந்தக் கிழட்டு வயசிலையே எனக்கு இந்த அளவிற்கு தெம்பு வரும் என்றால், எங்கடை இளம் பிள்ளையள் எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நிற்பார்கள் என்பதை நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறனான்.

 

இப்ப என்னவென்றால் பூனை இல்லாத ஊரில் எலிகளுக்குக் கொண்;டாட்டம் என்ற கதையாக எலிகள் எல்லாம் புலி வேசம் போட்டுக் கொண்டு புற்றீசல்கள் போல் கிளம்பித் திரியுது. கொஞ்சக் காலம் நரிகள் எல்லாம் புலித்தோல் போர்த்துக் கொண்டு ஊளையிட்டுக் கொண்டு திரிஞ்சுது. இப்ப நரிகளின் ஊளை கொஞ்சம் அடங்கிப் போக எலிகள் எல்லாம் ஏதோ தாங்கள் தான் புலிகள் என்ற நினைப்பில் உலாவுது.

 

மாவீரர் நாள் என்பது தலைவர் உரையாற்றுகின்ற நாள். இயக்கத்தின்ரை அதிகாரபூர்வ கொள்கைப் பிரகடனத்தைத் தலைவர் மட்டும் தான் வெளியிடுவார். அப்படிப் பார்க்கேக்குள்ளை மாவீரர் நாளில் தலைவர் மட்டும் தான் இயக்கத்தின்ரை கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிடலாம். கடந்த பத்து வருசமாகத் தலைவரிடம் இருந்து மாவீரர் நாளில் அறிக்கை ஒன்றும் வரவில்லை என்பதற்காக இஞ்சை வெளிநாட்டில் கொஞ்சப் பேர் அறிக்கை விடத் தொடங்கியிருக்கீனம்.

 

சரி, மாவீரர் நாளில் கந்தப்பு அறிக்கை விடுகிறார், சின்னையா அறிக்கை விடுகிறார், செல்லம்மா அறிக்கை விடுகிறார் என்றால் யாரும் அதைக் கணக்கில் எடுக்கப் போவதில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, தலைமைச் செயலகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடுகிறதை விட வேறை கொடுமை எதுவுமில்லை.

 

இப்படித் தான் 2009ஆம் ஆண்டும் நடந்தது. தான் கஞ்சிக்குடிச்சாறு காட்டுக்குள் நின்று கொண்டு அறிக்கை விடுகிறன் என்று ராம் என்று ஒருத்தர் ரீல் விட்டவர். தான் காட்டுக்குள் தான் நிற்கிறேன் என்று காட்டுவதற்காக பின்னால் கூ... கூ.. கூ.. என்று கொஞ்ச இடைவெளி விட்டு கொம்பியூட்டரில் குயில் ஒன்றையும் ஆள கூவ வைச்சவர் என்றால் பாருங்கோவன். ஆனாலும் பாருங்கோ அவர் கஞ்சிக்குடிச்சாற்றில் கஞ்சி குடிக்கவில்லை. மின்னேரியாவில் இருக்கிற சிங்கள ஆமிக்காரனின் காம்பில் இருந்து கொண்டு கட்டுச்சம்பலும், கிரிபத்தும் சாப்பிட்டுக் கொண்டு அறிக்கை விட்டவர் என்பது உடனேயே சனத்துக்கு விளங்கிவிட்டது.

 

அதுவும் மாவீரர் நாள் அறிக்கையின்ரை ஒலிப்பதிவுக்கு ‘மகாவீர’ அறிக்கை என்று சிங்கள உச்சரிப்பில் பெயர் வைச்சு ஆமிக்காரன் அனுப்பேக்குள்ளையே சனம் உண்மையை மணந்து பிடிச்சிட்டுது. உதாலை தான் சிங்களவனை மோட்டுச் சிங்களவன் என்று சொல்கிற நாங்கள்.

 

ராம் மாத்தையா தான் மின்னேரியா காட்டுக்குள் இருந்து அறிக்கை விட்டவர் என்றால், மலேசியாவில் இருந்து ஒருத்தர், இந்தியாவில் இருந்து இன்னொருத்தர், ஐரோப்பாவில் இருந்து இன்னொருத்தர் என்று ஆளாளுக்கு எல்லே மாறி மாறி அறிக்கை வெளியிட்டாங்கள். தம்பிமாரே, உந்த அறிக்கை கூத்தை நிற்பாட்டுங்கோ என்று என்னை மாதிரி கிழடுகள் கெஞ்சி, கேட்டும் எவனுமே அடங்குகிறதாக இல்லை. வருசா, வருசம் இயக்கத்தின்ரை கடிதத் தலைப்பில் அவனவன் அறிக்கை விடுகிறான்.

 

உதிலை இன்னொரு பகிடி பாருங்கோ, இந்த முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத் தலைப்பில் இரண்டு அறிக்கை வந்தது. இரண்டும் தலைமைச் செயலகம் என்ற பெயரில் தான் வெளியில் வந்தது. இதென்னடா கண்றாவி என்று சனம் தலையில் கையை வைச்சிட்டுது.

 

சரி, இது தான் போகட்டும். தாங்கள் தான் தலைமைச் செயலகம் என்று சொல்லிக் கொண்டு இந்த இரண்டு கும்பலும் ஒருத்தரோடு ஒருத்தர் காகிதப் போர் செய்து மூக்குடையட்டும் என்று பார்த்தால், தாங்கள் தொடர்ந்து போராடப் போகீனம் என்று இரண்டு கும்பலும் ஊளையிடுகிது.

 

இதை வாசிச்சதும் எனக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்திச்சுது. ‘அட தம்பிமாரே, ஒன்பதரை வருசமாக என்னடா போராட்டம் செய்கிறியள்?’ என்று இரண்டு தரப்பையும் செவிட்டில் பிடிச்சு இழுத்து வைச்சு நாக்கைத் தொங்கப் போடுகிற மாதிரி நச்சென்று நாலு கேள்வி கேட்பம் என்று பார்த்தால் ஆரைப் பிடிச்சு விளாசுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

 

தம்பிமாரே, போராட்டம் என்றால் சும்மா அறிக்கை விடுகிறதில்லை பாருங்கோ. களத்தில் நின்றால் தான் அது போராட்டம். சரி, தலைவர் பிரபாகரன் மாதிரி, நேத்தாஜி மாதிரி, சேகுவாரா மாதிரி, மாவோ மாதிரி உங்களால் களத்தில் இறங்கி எதிரியைப் பந்தாட முடியாவிட்டால், லெனின் மாதிரி மக்களை அணிதிரட்டி பெரிய புரட்சியைச் செய்யுங்கோ.

 

அதுவும் உங்களால் முடியாதென்றால், காந்தித் தாத்தா மாதிரி உப்புச் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் என்று களத்தில் நின்று சாத்வீக வழியில் சிங்கள அரச இயந்திரத்தை முடக்கப் பாருங்கோ.

 

தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக 1956ஆம் ஆண்டு எங்கடை தந்தை செல்வநாயகத்தாரின் தலைமையில் தமிழரசுக் கட்சிக்காரர் நடாத்திய சத்தியாகிரகத்தை வேண்டும் என்றால் போராட்டம் என்று சொல்லலாம். அல்லது 1961ஆம் ஆண்டு செல்வநாயகம் ஐயா நடாத்திய தமிழீழத்தில் சிங்கள அரச இயந்திரத்தை முடக்கிய ஒத்துழையாமை இயக்கத்தையும் போராட்டம் என்று சொல்லலாம். அப்படியாவது களமிறங்கிப் போராடுங்கோ.

 

ஆனால் அந்த அளவுக்கு உங்களுக்கு எல்லாம் துணிச்சல் இல்லை என்பது எனக்கு மட்டுமில்லை, இஞ்சை வெளிநாட்டிலையும் சரி, தாயகத்திலையும் சரி இருக்கிற முழுச் சனத்துக்கும் நல்லாகத் தெரியும். ஏனென்றால் காலிமுகத்திடலில் தமிழரசுக் கட்சிக்காரரின்ரை மண்டையை சிங்களக் காடையர் உடைச்சது போல், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் சிறையில் அடைத்ததைப் போல் உங்களுக்கும் சிங்களவன் செய்வான் என்று பயம்.   

 

அப்படி இல்லை, நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு லொபி மட்டும் தான் செய்யப் போகிறீங்கள்: இல்லாட்டி பரப்புரை மட்டும் தான் செய்யப் போகிறீங்கள் என்றாலும் பிரச்சினை இல்லை. ஆனால் அதற்குப் பேர் போராட்டம் இல்லை பாருங்கோ. அது தேச விடுதலைக்காக முன்னெடுக்கும் ஒரு அரசியல் செயற்பாடு. அவ்வளவு தான். ஒரு நாளும் அரசியல் செயற்பாடும், அரசியல் நடவடிக்கைகளும் போராட்டம் ஆகி விடாது. சும்மா இராஜதந்திரப் போராட்டம், அது, இது என்று சனத்தைப் பேய்க்காட்டாமல், உங்களால் முடிஞ்சதை, இதய சுத்தியோடு செய்யுங்கோ.

 

இது தான் உங்களுக்கு இந்த நைன்ரி சொல்லக் கூடிய ஆலோசனை.

 

சரி பிள்ளையள், அடுத்த முறை உங்களைச் சந்திக்கிறேன். இதை வாசிச்சதும் உங்களில் கொஞ்சப் பேருக்கு கோபம் வருகிறது. வரட்டே?

 

நன்றி: ஈழமுரசு (11.12.2018)