இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல்நலம் பாதிக்கும்!

வெள்ளி சனவரி 25, 2019

நீங்கள் இரவில் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன், உங்கள் அடுத்த நாளின் செயல்பாடுகள் அனைத்தையும் பாதிக்கும்.

காலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல இரவு நேர உணவும் அவசியமானது. ஏனெனில் இரவு நீங்கள் சாப்பிடும் உணவுதான் அடுத்தநாள் காலை நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழ தேவையான சக்தியை கொடுக்கிறது. எனவே எக்காரணத்தை கொண்டும் இரவு உணவை தவிர்க்கக்கூடாது. ஆனால் நீங்கள் எந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமானது.

ஏனென்றால் இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும், தின்பண்டங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக நீங்கள் இரவில் சாப்பிடும் சில உணவுகள் உங்கள் செரிமான மண்டலத்தை பாதித்து உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன், உங்கள் அடுத்த நாளின் செயல்பாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இந்த பதிவில் இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

* சுவையான இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. இறைச்சியை எப்பொழுது கொடுத்தாலும் சாப்பிடுபவர்களே இங்கு அதிகம். ஆனால் அதை இரவு நேரத்தில் சாப்பிடுவது என்பது சரியான தேர்வு அல்ல. இறைச்சி உங்களுடைய உடல் இயக்கத்தை அதிகரிப்பதுடன் உங்களின் இரவு நேர தூக்கத்தையும் கெடுக்கிறது. நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* காய்கறிகள் இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்தவை. எனவே அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானது. ஏனெனில் காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இவை உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரக்கூடியயவை. இது வழக்கமாக நீங்கள் இரவில் விழித்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கும்.
 

* சிப்ஸ் மற்றும் அதனை போன்ற நொறுக்குதீனிகள் அனைவருக்கும் பிடித்த ஒன்று. இரவு உணவுடன் இத்தனையும் சேர்த்து சாப்பிடுவது பலரின் பழக்கமாக கூட இருக்கலாம். ஆனால் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிப்ஸ்களில் உள்ள மோனோசோடியம் குளூட்டமேட் என்னும் பொருள் உங்கள் தூக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்று மேலும் இது இரவுநேரத்தில் நெஞ்செரிச்சலை உருவாக்கக்கூடும்.

 


* பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது மிகச்சரியான ஒரு யோசனை ஏனெனில் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கொழுப்பு நிறைந்த இந்த உணவு நீங்கள் தூங்கும்போது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் செரிமானம் அடையவும் நிறைய நேரம் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான வேறு உணவை சாப்பிடுவது நல்லது.

* இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் இரவு சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது. ஐஸ்க்ரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவை இரண்டும் செரிமானம் அடைய போதுமான உடல் உழைப்போ, நேரமோ இரவில் நீங்கள் உங்கள் செரிமான மணடலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் உங்களின் எடை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

* பெரும்பாலும் இரவு நேரத்தில் நாம் பீட்சா சாப்பிடமாட்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையும்போது நம் வாய் சும்மா இருக்குமா? எனவே ஆசைப்பட்டு சிறிது பீட்சா சாப்பிட்டாலும் அது உங்களுக்கு சுவையுடன் எடை அதிகரிப்பையும் சேர்த்தே வழங்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சலையும் சேர்த்து ஏற்படுத்தும்.

* தூங்க செல்லும் முன் காபி குடிப்பது ஆரோக்கியமற்றது என்பது தெரிந்த பலருக்கும் சாக்லேட் சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற ஒன்று என்பது புரிவதில்லை. ஏனெனில் காபியில் இருப்பது போலத்தான் சாக்லேட்டிலும் காஃபைன் உள்ளது. எனவே இரண்டையுமே தவிர்ப்பதுதான் ஆரோக்கியதிற்கு நல்லது.

* இரவு நேரம் மது அருந்திவிட்டு தூங்குவது சிறந்த யோசனையாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அது நல்ல முடிவல்ல. உங்களுக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்குமே தவிர நிம்மதியான தூக்கம் உண்மையில் கிடைப்பதில்லை. நீங்கள் ஓய்வெடுத்தாலும் உங்களின் அடுத்தநாள் செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படலாம்.

* மிளகாயில் கார்போஹைட்ரேட் மட்டும் அதிகம் இருப்பதில்லை, இயற்கையாகவே இதில் கலோரிகளும் அதிகம் உள்ளது. இரவு உணவில் இதனை சேர்த்துக்கொள்ளும்போது தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமின்றி எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.