இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் மீது மோசமான சித்திரவதை – ஐ.நாவில் தமிழ்ச்செல்வனின் மனைவி

செப்டம்பர் 18, 2017

இறுதி யுத்தத்தில் படையினராலும் அவர்களுன் சேர்ந்தியங்கிய துணை ஆயுதக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள் மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என, தமிழீழ அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா ஐ.நாவில் தெரிவித்துள்ளார். 

வவுனியா ஜோசப் முகாம் தம்மைத் தடுத்து வைத்திருந்த பல முகாம்களிலும் தமிழ், இளைஞர் யுவதிகள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

அந்த இடத்தில் இருந்து படை அதிகாரியிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றபோது எனது கண்கள் கட்டப்பட்டிருந்தன. ஆனாலும் அவர்களின் அவலக் குரல்களை என்னால் கேட்க முடிந்தது. அது மோசமான நிலை என அவர் வர்ணித்தார். 

தன்னையும் இரண்டு பிள்ளைகளையும் பிரிக்க படைத்தரப்பு முற்பட்ட போதிலும் அதற்குத் தான் இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறு பிரித்து தன்னைத் தனிமைப்படுத்தியிருந்தால் இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கதி தனக்கும் நேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகளைக் கொலை செய்யவேண்டாம் என கோத்தபாய ராஜபக்ஷவே உத்தரவிட்டிருந்தார்.

ஜோசப் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவே என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு நான் தெரிந்த விடயங்களைக் கூறினேன். தெரியாத விடயங்களுக்கு இல்லை என்றே பதிலளித்தேன்.  

தமிழ்ச்செல்வனின் மனைவி என்பதை இனம்கண்டவுடன் ஐநூறு வரையான சிங்களச் சிப்பாய்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டனர் எனவும், தமிழ்ச்செல்வனுக்கு கீழ் பணியாற்றிய தூயவன் என்ற முன்னாள் போராளி ஒருவரே அவர்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றினார் எனவும் அவர் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்படி விடயங்களைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

படை அதிகாரிகளுக்கு முன்பாக தான் சாதாரண ஒரு குற்றவாளியாக அல்லாமல் தலையை நிமிர்த்தி, கடுமையாகவே நடந்துகொண்டேன்.  

விசாரணை முடிவில் தான் மக்களோடு மக்களாக இணைக்கப்பட்டபோது மாற்று இயங்கத்தைச் சேர்ந்த ஒரு குழவினர் தான் இருந்த இடத்திற்கு வெள்ளை வாகனத்தில் வந்து மோசமான வார்த்தைகளால் என்னையும் தமிழ்ச்செல்வனையும் திட்டினர். புpன்னர் என்னை இழுத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால், எமக்கு பாதுகாப்பாக நின்ற படை அதிகாரி அதற்கு அனுமதிக்கவில்லை. 

பம்பைமடு முகாமில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ஏறக்குறை 1500 வரையான பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு தண்ணீருக்கு பலத்த தட்டுப்பாடு. அதனால் நாம் பல சிரமங்களை எதிர்கொண்டோம். 

பம்பைமடு முகாமில் ஒரு பெண் இராணுவச் சிப்பாய், நான் தமிழ்ச்செல்வனின் மனைவி என்பதை இனம்கண்டுகொண்ட பின்னர், 'உனது புருசனால்தான் எனது இரு சகோதரர்களை இழந்தேன்' எனக் கூறி என்னைக் கண்டபடி திட்டினார். 

அப்போது, 'எனது புருசன் உங்கள் இடத்தில் வந்து யுத்தம் செய்யவில்லை. எமது மண்ணில் நாம் நிம்மதியாக வாழத்தான் யுத்தம் செய்தார். உனது சகோதரர்கள்தான் எங்கள் மண்ணுக்கு வந்து சண்டை செய்து செத்தார்கள். உங்கள் சகோதரர்களின் சாவுக்கு எனது கணவர் காரணம் அல்ல' என நான் கூறினேன். 

'நான் அவ்வாறு கூறியதால் என்னைத் தாக்க முற்பட்ட அப் பெண் சிப்பாய், பின்னர் உயர் இராணுவ அதிகாரியிடம் கொண்டு சென்று ஒப்படைத்தார் 

இவ்வாறு பல இடங்களிலும் விசாரணைகளின்போது நான் அவர்களுடன் விட்டுக்கொடுக்காமல், தலையை நிமிர்த்தியே பதிலளித்தேன்.  

'நான் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்து போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டுச் சென்ற கருணா என்னை வந்து சந்தித்தார். அதன் பின்னர் அவரை இதுவரையிலும் நான் காணவில்லை. 

ஆனால், அவர் என்னை வந்து சந்தித்தமை தொடர்பாக பல்வேறு கதைகள் வதந்திகளாக வந்திருக்கின்றன என்பதை நான் வெளியே வந்த பின்னர்தான் அறிந்துகொண்டேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....