இலட்சியத் திசையில் பெண்ணுரிமைப் பயணம்!

March 09, 2017

தமிழ்நாட்டில் தமிழர் உரிமைப் போராட்டங்கள் வீறு பெற, வீறு பெற மகளிர் விழிப்புணர்ச்சியும், மகளிர் உரிமைக் களங்களும் விரிவடைந்து வருகின்றன.தைப்புரட்சிப் போராட்டங்களில் மகளிர் பங்களிப்பு அளப்பரியது; கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகராக – சரிபாதிப் பங்களிப்பு மகளிர் வழங்கினர். இப்போபது நெடுவாசல் சுற்று வட்டாரத்தில் நடந்து வரும் நச்சுக் குழாய் எதிர்ப்புப் போராட்டத்திலும் மகளிர் பங்கேற்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது.

சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர அகவையினர், அகவை முதிர்ந்தோர், அதிகம் படித்தோர், அதிகம் படிக்காதோர் எனப் பலவகைப் பெணகளும் இப்போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.தமிழ்த்தேசியப் பாவலர் பாரதிதாசன் இக்காட்சிகளைப் பார்த்திருந்தால் பூரித்துப் பொங்கி, புதுப்புது மகளிர் புரட்சிப் பாக்கள் புனைந்திருப்பார். அவர் வாழ்ந்த காலத்தில் கல்லூரி சென்று கற்றுத் திரும்பிய மாணவிகளைக் கண்டபோது, பூரித்து அவர் எழுதிய பாடல் வரிகள் இதோ:

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்

கவிதையில் ஒளிமி குந்தும்,

நிலவிடும் நிலா முகத்து

நீலப்பூ விழி மங்கைமார்

தலையாய கலைகள் ஆய்ந்து

தம்வீடு போதல் கண்டேன்

உலவிடு மடமைப் பேயின்

உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!

(அழகின் சிரிப்பு, பட்டணம், 16).

 ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவே தமிழ்நாட்டில் பெண்கள் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை படிக்கிறார்கள்.இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த முற்போக்குக் கருத்தையும் முதலில் முன்மொழிவது அல்லது முதலில் வரவேற்பது தமிழ்நாடே! தொழிற்சங்க உரிமை, பொதுவுடைமை, மகளிர் உரிமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கருத்துகளை ஏற்பதில் பிரித்தானிய இந்தியாவில் தமிழ்நாடே முன்னணியில் நின்றது.

தமிழ் இனத்தின் சிந்தனை வளம் மிகவும் பழைமையானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் சமநிலையில் பேசிய மொழி தமிழ்மொழி!

ஆண்டவனைக்கூட ஆண்பாதி – பெண்பாதி என்று சிந்தித்த இனம் தமிழினம்!

சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெண் புலவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக – பெண் பால் அறிஞர்கள் அந்தக் காலத்தில் வேறெந்த மொழியிலும் இல்லை. சங்க காலத்தில் திருமணச் சடங்கை நிறைவேற்றியவர்கள் மூத்த பெண்களே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்ணகி என்ற பெண்ணைக் காப்பியத் தலைவியாக்கி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார். அடுத்து வந்த மணிமேகலைக் காப்பியத்தின் பெயரும் தலைவியும் பெண்ணே!

இப்படிப்பட்ட தமிழினத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட ஆணாதிக்கக் கொடுமைகள் – பெண்ணடிமைத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல!

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர். சென்னை லௌகீக சங்கத்தினர், அயோத்தி தாசப் பண்டிதர் போன்றோர் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண் விடுதலை எழுச்சிப் பாக்களை பாரதியார் படைத்தார்!

பெரியார் தலைமையில் இயங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18 நாட்களில் நடந்தது. இதில் பல்வேறு முற்போக்குத் தீர்மானங்கள் போடப்பட்டன. அவற்றில் ஒன்று, பெண்களுக்குச் சம உரிமை அளிப்பது!

 இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் டபுள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனார்; இம்மாநாட்டில் கொடி ஏற்றி உரையாற்றியவர் சர் பி.டி. இராசன்! இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கூடி இருந்தனர்!

மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தி வந்த பொதுநிலைக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு மாநாடு சென்னைப் பல்லாவரத்தில் 1931 – பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் நடந்தது. அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களில், “கோயில்களில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிப்பது, பெண்களுக்கு ஆடவரைப் போல் பெற்றோர் சொத்தில் சம பங்கு அளிப்பது, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது, சாதிக் கலப்புத் திருமணத்தை ஏற்பது, கைம்பெண் (விதவை) திருமணத்தை ஏற்பது” என்பவையும் இடம் பெற்றிருந்தன.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டை அடுத்து, பெரியார் பெண்ணுரிமைச் செயல்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வந்தார். தாலி மறுப்புத் திருமணம், கைம்பெண் மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் பலவற்றை நடத்திக் காட்டினார். அவர் வழியில் அண்ணாவும் செயல்பட்டார்.

இந்த முற்போக்குச் செயல்பாட்டிற்குரிய சிறந்த களமாக விளங்கியது. இதற்கு மரபு வழி முற்போக்குத் “தமிழ் மனம்” தக்க வாய்ப்பளித்தது. திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படும் வேறு மாநிலங்களிலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு இனங்களிலோ இவ்வாறான பெண் விடுதலைச் செயல்பாடுகள் தமிழ்நாட்டைப் போல் நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி பெற்ற மாநிலங்களில்கூட இவ்வாறு நடைபெறவில்லை!

 அரசியலில் எவ்வளவோ சீரழிவுகளுக்கும், ஊழல்களுக்கும், கங்காணித்தனங்களுக்கும் கொள்கலனாகிப் போன தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிகள்கூட பெண்ணுரிமைக்கான புதிய சட்டங்களை இயற்றியமை, மேற்கண்ட தமிழின மரபு வழி முற்போக்கு அழுத்தங்களால்தான்!

 துல்லியப்படுத்தப்பட்ட புதிய பெண் சொத்துரிமைச் சட்டத்தை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியது (1989). உள்ளாட்சிப் பதவிக்கான தேர்தல்களில் ஐம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி (2016).

இப்படிப்பட்ட பெண்ணுரிமைச் சிந்தனைகளையும் பெண் விடுதலைச் செயல்பாடுகளையும் மரபு வழியில் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள தமிழினத்தில், இன்று நிகழ்ந்து வரும் பெண் ஒடுக்குமுறை வன்செயல்களும், பெண்ணுரிமை மறுப்புக் கொடுமைகளும் அறப்பண்பாடு கொண்ட தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியாகக் குத்துகின்றன.
அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பதினாறு அகவைச் சிறுமி நந்தினையை கொடியவர்கள் கூட்டு வல்லுறவு கொண்டு கொலை செய்து தூக்கி எறிந்தனர்.

 சென்னை மவுலிவாக்கத்தில் ஏழு அகவைப் பெண் குழந்தை ஆசினி காமவெறியனால் வல்லுறவு கொண்டு கொல்லப்பட்டது. இந்த வரிசையில் வெளியே வந்தவை சில; வெளியே வராதவை பல!

காதலிக்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்வது, அப்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசி சிதைப்பது அல்லது அப்பெண்ணை அழிப்பது, திருமணம் செய்வதற்கு மணமகனுக்குக் கொள்ளை விலை கொடுப்பது, அந்தக் கொள்ளை விலையில் பாக்கி இருந்தால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவது, அல்லது சமையல் எரிவளியைத் திறந்து விட்டு தீக்கு இரையாக்குவது, அப்பப்பா – எத்தனை, எத்தனை வடிவங்களில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்!
பெண் கல்வி, ஆண் கல்வி பெருகியுள்ள காலத்தில், விழிப்புணர்ச்சி வளர்ந்துள்ள காலத்தில் பெண்களுக்கெதிரான இத்தனை வன்கொடுமைகள் ஏன்? புதுப்புது வடிவங்களில் பெண்ணடிமைத்தனம் ஏன்? அதுவும் மரபு வழியில் முற்போக்குத் “தமிழ் மனம்” படைத்தத் தமிழினத்தில் இக்கொடுமைகள் ஏன்?

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு வளர்ச்சி, பொருளியல் வளர்ச்சி, நுகர்வு வளர்ச்சி, செய்தித் தொடர்பு வளர்ச்சி, உள்கட்டுமான வளர்ச்சி போன்றவை ஒப்பீட்டளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் அவற்றிற்கு இணையாக மன வளர்ச்சி ஏற்படவில்லை! மன வளர்ச்சி என்பது மேற்கண்டவற்றிற்கு இணையாக அல்ல, மேற்கண்டவற்றை மேலாண்மை செலுத்தும் அளவில் வளர வேண்டும்.

 மன வளர்ச்சி என்பது பெரிதும் சமூகம் சார்ந்தது. சமூகத்தின் மன வளர்ச்சிக்கேற்பவே, சராசரித் தனி மனித மன வளர்ச்சியும் இருக்கும். இலட்சியங்களை நோக்கிச் சமூகம் பயணம் செய்யும் போதுதான், சமூகத்தில் உயர் பண்புகள் வளரும்; அதுவே மன வளர்ச்சி! அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்று: தைப்புரட்சியில் சென்னைக் கடற்கரையில் இலட்சக்கணக்கிலும், மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கிலும் இளம் ஆண்களும் பெண்களும் இரவும் பகலும் பல நாள் ஒரே இடத்தில் தங்கி கோரிக்கை முழக்கமிட்டனர். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தீய நிகழ்வுகூட அங்கு இல்லை! அவர்களை வழி நடத்தியது இலட்சியம்!

சமூகம் முழுவதற்குமான இலட்சியம் உருவாகிட – அதற்கான அடிப்படை சமூக அலகு எது? ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டம்! அதன் பெயர் என்ன? இனம் அல்லது தேசிய இனம்!

உலக மானிடம் எப்படி சமூகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? தேசிய இனம், தேசிய மொழி அடிப்படையில்! அந்தந்தச் சமூகத்திற்கு அந்த அடிப்படையிலேயே இறையாண்மை அதாவது சுதந்திரத் தாயகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக சுதந்திரத் தாயகம் அமைக்கப்படாத தேசிய இனங்கள் அதற்காகப் போராடிக் கொண்டுள்ளன!

தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழின அடிப்படையிலான மறுமலர்ச்சி தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் இன அரசியலோடு, தமிழர் மறுமலர்ச்சி செயல்பட்டது. அக்காலத்தில்தான் பெரியார், மறைமலை அடிகளார் சீர்திருத்தக் கருத்துகள் பகுத்தறிவுத் தளத்திலும் ஆன்மிகத் தளத்தில் மக்கள் அரங்கில் செயல்பட்டன.
தமிழ் இனத்தில் தொடங்கி, ஆரிய உருவாக்கமான திராவிடக் கற்பனை இனத்திற்குப் பெரியார் சென்றாலும் அவரின் செயற்களம் தமிழினத் தாயகம்தான்! இப்பின்னணியில் தனித்தமிழ்நாடு, தனித் திராவிட நாடு கோரிக்கைகள் தமிழ்நாட்டில் மக்கள் கோரிக்கைகளாக, சமூக இலட்சியங்களாக வளர்ச்சி பெற்றன!

 மகளிர் விடுதலைக்கு உழைப்போர், போராடுவோர் இந்த வரலாற்றுப் படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் – தொழிலாளர் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கம் செயல்படுவதுபோல், தமிழ்ப் பெண்களின் உரிமைப் போராட்டத்தை, பெண்களுக்கான அரங்க நடவடிக்கையாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. பெண்ணியம் பேசுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழர்களின் இலட்சிய இயங்கு திசையில் பிரிக்க முடியாததாகப் பெண்ணுரிமை இணைக்கப்பட வேண்டும்.

தைப்புரட்சியின் “தமிழன்டா” முழக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர் உரிமை உணர்ச்சியின் பொது முழக்கமாகவே ஆண்களும் பெண்களும் “தமிழன்டா” முழங்கினர்.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் அமைக்கும் தமிழ்த்தேசிய இலட்சியம்தான் சமகாலத் தமிழர்களுக்கான இன்றைய சமூகப் பொது இலட்சியம்! இந்த இலட்சியத்தின் ஊடாகவே, ஆண் – பெண் சமத்துவம் உள்ளிட்ட சமூகச் சமத்துவங்கள் அனைத்தையும் முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்பே மக்கள் பங்கெடுக்கும் சமூக மாற்றமாக அமையும்!

செய்திகள்
புதன் August 23, 2017

ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகிய வடக்குக் கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கடந்த அறுபத்தொன்பது ஆண்டுகளாக சிங்கள அரசு முன்னெடுத்து வரும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நிகராக

திங்கள் August 14, 2017

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்த

புதன் August 09, 2017

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குமாறு கடந்த 26.07.2017 அன்று ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு (Council of the European Union) அதன் அதியுயர்நிலை நீதிமன்றமாகிய ஐர