இழந்த உரிமைகளை மீட்கவே இலங்கையில் தமிழர்கள் போராடுகின்றனர்

சனி ஏப்ரல் 14, 2018

சிறிலங்காவில் தமிழர்களின் உரிமைகள் சிங்கள அரசால் பறிக்கப்பட்டுள்ளன, அந்த இழந்த உரிமைகளை மீட்பதற்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியாவில் தெரிவித்துள்ளார். 

மேலும், சிறிலங்கா இந்தியாவை விடவும் சீனாவுடனேயே நெருக்கமான உறவு வைத்திருக்கின்றது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது இப்போது தெரியாது எனவும் அவர் கூறினார். 

இந்தியா – தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

நூலை வெளியிட்டுவைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துக் கூறினார். அப்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இலங்கையில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை

அதன் காரணமாக இலங்கை அரசியல் கட்சிகளிடமும் ஆளும் கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகின்றன. 

ஆனாலும், 2020-ம் ஆண்டு வரையிலும் பிரச்சினை இல்லாமல் ஆட்சியைக் கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயற்சி செய்து வருகிறார்கள்

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் அதிகமாகப் பறிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் விளைநிலங்கள் அரசாங்கத்தாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் தமிழர்கள் தங்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இழந்த உரிமைகளை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து சிங்களவர்களை அழைத்து வந்து மீன்பிடிக்கச் செய்வதால் வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிபோகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 

1987-ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டுவிட்டார்கள். அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. 

வடக்கு மாகாணப் பகுதிகளில் இப்போதும் ஒன்றரை லடசம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு மறுத்து வருகிறது. ராணுவ வீரர்களால் விளை நிலங்கள் மற்றும் கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இலங்கை அரசுக்கு இந்தியாவுடனான உறவு நெருக்கமானதாக இருக்கவில்லை. இந்தியாவை விடவும் சீனாவுடன் இலங்கை அரசானது அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. 

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்கள் குடியேற்றப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை. மாநில சுயாட்சி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. - என்றார்.