இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க டிரம்ப் முடிவு!

Wednesday December 06, 2017

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அங்கு குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ் என பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.