இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க முடிவா?

December 04, 2017

 இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு பல அரபு நாடுகள் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவித்தால் அதை அங்கீகரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க கூறியிருந்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய முடிவு அரபு இஸ்லாமியர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்துவத்துவதோடு, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள சமாதான முயற்சியை பாதிக்கும் என்று அய்மான் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் அப்பாஸ் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்