ஈரான், சோமாலியா அகதிகளை நிராகரித்த அமெரிக்கா!

ஞாயிறு மே 13, 2018

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான நேர்காணலை நடத்தி வரும் அமெரிக்க குடிவரவுத்துறை ஈரான், சோமாலியாவைச் சேர்ந்த சுமார் 150 அகதிகளை நிராகரித்துள்ளதாக Refugee Action Coalition அமைப்பின் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். இந்த அகதிகள் அனைவருமே ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமான நவுருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் என ஈரான், சோமாலியாவைச் சேர்ந்த அனைவருமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், “இறுதியாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கேலிக்கூத்து என்பது அம்பலமாகியுள்ளது. நவுருவில் உள்ள மூன்றில் ஒரு அகதி ஈரானிய அகதியாக இருக்கும் பொழுது, எல்லா ஈரானியர்களும் சட்டபூர்வமான அடிப்படையில் நிராகரிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை” என்கிறார் ரிண்டோல்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை நவுருவிலிருந்து 150 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டிருக்கின்றது. “அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக நவுரு மற்றும் மனுஸ் தடுப்பு முகாமில் பெரும் கவலை இருந்து வருகின்றது” என மனுஸ் தடுப்பு முகாமில் உள்ள பத்திரிகையாளரும் குர்து அகதியுமான பெஹ்ரவுஸ் பூச்னி தெரிவித்துள்ளார். 
அண்மையில், முகாமில் உள்ள அகதிகள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ளவர்கள் 

அமெரிக்கா, மலேசியாவைத் தவிர வேறொரு நாட்டில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் நிராகரிப்புத் தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாகியிருந்த நிலையில், நவுருவில் உள்ள ஈரானிய அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது..

“ஈரானியர்கள் மற்றும் சோமாலியர்கள் மீது எந்த அதிகாரப்பூர்வ தடையும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியுள்ள போதும், அமெரிக்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை திணித்து வருகின்றனர். எல்லா ஈரானியர்களும் நிராகரிக்கப்படுவது தற்செயலானது அல்ல” எனச் சந்தேகிக்கிறார் ஐன் ரிண்டோல்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது. 


2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது. 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் படகு வழியே வந்த சுமார் 2000 அகதிகள் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு கப்பலில் செல்ல முயன்றதாக மலேசியாவில் 131 இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு இச்சூழலுடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.