ஈழத்தமிழர் தரப்புடன் குர்தி பிரதிநிதிகள் சந்திப்பு – இணைந்து செயற்படுவதற்கு ஆலோசனை!

Friday December 15, 2017
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு நாளாகிய நேற்று 14.12.2017 வியாழக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் ஈழமுரசு நிறுவனத்தின் ஏற்பாட்டில், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும், குர்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   இதன்பொழுது தனியரசுக்கான பாதையில் இரு தேசங்களும் முகம்கொடுக்கும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டதோடு, அடுத்த கட்டமாக இரு தேசங்களும் தமக்கிடையேயான உறவைக் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அரசியல், பண்பாட்டுத் தளங்களில் இணைந்து செயற்படுவதற்கும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   இந் நிகழ்வில் குர்தி தேசத்தின் பிரதிநிதிகளாக தென்குர்திஸ்தான் (வடஈராக்) சொறான் பல்கலைக் கழக விரிவுரையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான கலாநிதி இப்ராகிம் சதீக் மாலாசாடா (Dr Ibrahim Sadiq Malazada), குர்திஸ்தானின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், ஈராக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துக் கலாநிதி மொகமட் கயானி (Dr Mohhammad Kayani), கிழக்குக் குர்திஸ்தான் (மேற்கு ஈரான்) மனித உரிமைச் செயற்பாட்டாளரும், இலண்டன் பல்கலைக் கழக விரிவுரையாளருமான கலாநிதி ஐயர் அற்றா (Dr Ayar Ata) ஆகியோரும் கலந்து கொண்டனர்.   ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக ஈழமுரசு நிறுவனத்தின் ஆசிரியர் பீட அங்கத்தவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினராகத் திகழ்ந்தவருமான திரு ச.ச.முத்து, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு ப.கமல், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் பணிப்பாளரும், ஒரு பேப்பர் ஆசிரியருமான திரு கோபி ரட்ணம், எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான திருமதி சுகி கோபி ரட்ணம், அரசறிவியலாளரும், ஈழமுரசு நிறுவனத்தின் ஆசிரியர் பீட அங்கத்தவருமான கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா, தமிழீழ விடுதலைப் புலிகளின் கள மருத்துவராகத் திகழ்ந்த திரு உயற்சி, வடமேற்கு இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு மதுரா, செயற்பாட்டாளர்களான திரு செந்தில், திரு புதியவன், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலியின் அரசியல் ஆய்வாளர் திரு வேல் தர்மா, அதிர்வு இணைய ஆசிரியர் திரு கண்ணன், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்பீட ஒருங்கிணைப்பாளர்களான திரு லக்சன் தர்மலிங்கம், திரு செல்வகுமார், அரசியல் செயற்பாட்டாளர்களான திரு கிருபா, திரு நிரோசன், வடகிழக்கு இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் செயற்பாட்டாளர் திரு முரளி, அரசியல் செயற்பாட்டாளர்களும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுமான திரு கோல்டன், திரு தரணீபன் (யாழவன்), தமிழ் கார்டியன் (Tamil Guardian) இணையப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் செல்வி அபிநயா நாதன், இணை ஆசிரியர்களான மருத்துவக் கலாநிதி சிவகாமி ராஜமனோகரன், மருத்துவக் கலாநிதி துசியந்தன் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.   தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திலும், குர்தி தேசிய விடுதலைப் போராட்டத்திலும் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும், எதிரி அரசுகளால் இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட ஈழத்தமிழ் மற்றும் குர்தி பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் குறித்தும், அதில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த கனதியான பாத்திரம் தொடர்பாகவும் குர்தி பிரதிநிதிகளுக்கு கலாநிதி சிறீஸ்கந்தராஜா விளக்கமளித்தார்.   தொடர்ந்து குர்தி விடுதலைப் போராட்டம் தொடர்பான சிறப்புரையினை கலாநிதி இப்ராகிம் சதீக் மாலாசாடா அவர்கள் ஆற்றினார்.   அவரைத் தொடர்ந்து குர்தி விடுதலைப் போராட்டம் குறித்தும், தென்குர்திஸ்தான் மற்றும் கிழக்குக் குர்திஸ்தான் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கருத்துரைகளை மருத்துவக் கலாநிதி மொகமட் கயானி, கலாநிதி ஐயர் அற்றா ஆகியோர் நிகழ்த்தினர்.   இதனைத் தொடர்ந்து திரு கோபி ரட்ணம் அவர்களின் தலைமையில் குர்தி-தமிழ் பிரதிநிதிகளுக்கு இடையிலான கருத்தாடல் இடம்பெற்றது.   சந்திப்பின் நிறைவில் குர்தி தேசத்திற்கும், ஈழத்தமிழர் தேசத்திற்கும் இடையிலான அரசியல், பண்பாட்டு உறவைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களும் ஆராயப்பட்டன.