ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையில் அதிக ஈடுபாடு காட்டுவேன்!

நவம்பர் 30, 2017

கனடிய நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும் பழமைவாதக்கட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த வாரம் மிசிசாக நகரில் தமிழ் மக்களை முக்கியமாக தனது கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் இரவு பகலாக உழைத்து தன்னை வெல்ல வைத்த கட்சியின் தன்னார்வத் தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அத்துடன் கடந்த காலத்தில் முன்னாள் பிரதமர் ஸ்ரிபன் காப்பர், வெளிநாட்டு அமைச்சர் ஐன் பெயார்ட் ஆகியோர் இலங்கை சார்ந்த விடயங்களில் முன்னெடுத்த செயல்பாடுகளை தவறாமல் இன்னும் வேகமாகவும், பலன் தரும் வகையிலும் பணி புரிவேன் எனவும் உறுதி மொழி கொடுத்தார்.
 
மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த மே மாதம் 27ஆம் திகதி 13 வேட்பாளர்கள் தேர்தலுக்கு நின்ற நிலையில் 51 வீதமான வாக்குகளைப் பெற்று பழமைவாதக்கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

38 வயதான மதிப்புக்குரிய அன்ரூ சியர் கடந்த கனடிய நாடாளமன்றத்தின் சபாநாயகராக 5 ஆண்டுகளாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோரன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் சமூகம் பழமைவாதக்கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் ஆர்வத்துடன் பங்கு பெற்றிருந்தார்கள். பழமைவாதக்கட்சியின் தன்னார்வத் தொண்டர்களாக பல தமிழ்ச் சகோதர சகோதரிகள் பனி காலத்திலும் இலையுதிர்காலத்திலும் பல உறுப்பினர்களை கட்சியில் இணைத்து மதிப்புக்குரிய அன்ரூ சியர் அவர்கள் வெல்ல வழி வகுத்தார்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.
 
மதிப்புக்குரிய அன்ரூ சியர் அவர்கள் தமது உரையாடலில் இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்திலும் தமிழ் மக்களின் மனித உரிமை மட்டிலும் பொறுப்பாக நடந்து கொள்ள தமது கட்சி சார்பில் அதிக அழுத்தத்தை பிரயோகிக்க தவற மாட்டாது என்பதை உறுதிப்படுத்தினார்.

செய்திகள்