ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை - டாக்டர் ராமதாஸ்

சனி அக்டோபர் 03, 2015

இனப்படுகொலையை நடத்தியவர்களைத் தண்டனையின்றி தப்பிக்கவும், சொந்தங்களைப் பறிகொடுத்தவர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கும் அமெரிக்கத் தீர்மானம் வகை செய்யும் என பா.ம.க நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 

"இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள்தான் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

 

இதை ஆதாரங்களுடன் நிரூபித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது. ஈழத்தமிழர்களின் நலன்களையும், மனித உரிமையைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கடந்த ஆண்டு வரை வலியுறுத்தி வந்தன.

 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அங்குள்ள நிலைமை முற்றிலுமாக மாறி விட்டதைப் போன்ற ஒரு பொய்யான சித்திரத்தை உருவாக்கி, இலங்கை மீதான போர்க்குற்றத்தை அந்நாட்டு நீதிமன்றத்திலேயே விசாரிக்க அனுமதிப்பது திருடன் கையில் சாவியை ஒப்படைப்பதற்கு ஒப்பாகும்.

 

ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்பதும், இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது மட்டும்தான் அதன் நோக்கம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இலங்கையை வழிக்கு கொண்டு வர இனப்படுகொலையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, அதன் நோக்கம் நிறைவேறியதும் இலங்கையை காப்பாற்றத் துடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட இந்தியா இந்த பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றது.

 

உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு இவற்றைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தால், அதற்கு முன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க அது தான் அடிப்படையாக அமையும். போர்க்குற்ற விசாரணையை இலங்கை நீதிமன்றங்களே நடத்திக்கொள்ள அனுமதித்து விட்டு, தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

 

கடைசி நேரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை ஆதரித்திருப்பது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகமும், அநீதியும் ஆகும். இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், இப்போதைய தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே இப்பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு காட்டுகின்றது"