ஈழ பெண்ணுக்கு நடந்த கொடுமை!

Wednesday November 01, 2017

ஈழத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

தன்னுடைய 23 வயது மகள், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அழகுகலை நிபுணராக வேலை செய்து வந்தார் எனவும், இவர் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனதாகவும், மிதுன் சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து சென்னையில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் மிதுன் சீனிவாசன் தன் மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.  மேலும், சென்னையில் நடிகை புவனேஷ்வரியின் வீட்டில் வைத்து மிதுன், புவனேஸ்வரி மற்றும் அவர்களது ஆட்கள், தன் மகளை போதைக்கு அடிமையாக்கி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், ஆனால் தன் மகள் கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி காவல் துறை  மீட்கப்பட்டார். ஆகஸ்ட் 17ம் திகதி மீண்டும் காணாமல் போய் விட்டார். தற்போது அவர் அடையாறில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

தன் மகள் மீண்டும் நடிகை புவனேஷ்வரியின் பிடியில் சட்டவிரோதமாக உள்ளார்.  எனவே சட்டவிரோத பிடியில் சிக்கியுள்ள தன் மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், என்.சதீஷ்குமார் அமர்வு, விசாரணைக்காக நடிகை புவனேஷ்வரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.  அதன்படி நேற்று நடிகை புவனேஸ்வரி நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், சதீஷ்குமார் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது நடிகை புவனேஸ்வரி, மிதுன், இளம் பெண் ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து, சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ள மிதுன் சீனிவாசன் என்பவரும் நடைபெற்ற திருமண பதிவு சான்றிதழை நவம்பர் 21ம் திகதி தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரி, இந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.  மேலும் சம்பந்தப்பட்ட பெண்னை, அவரது பெற்றோரே அடித்து, கொடுமைப் படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.