உங்கள் மரணத்தின் பின்னுள்ள அர்த்தத்தை..சத்தியத்தை..உங்கள் தாய்நிலம் அறியும்!

திங்கள் நவம்பர் 27, 2017

நீங்கள் நடந்த பாதைகளில் படர்ந்திருந்த முட்களை உலுவிந்தம்பழக் காடுகளும் கானான் கோழிகளும் அறியும். வீரைப்பழங்களும் பன்றியிறைச்சி வத்தல்களும் அறியும் உங்கள் பசியின் பெருவெப்பம். 

குருதி கசிந்த உங்கள் தோள்ப்புண்களின் பெருத்த வலியை நீங்கள் தடிகளில் காவித்திரிந்த சாப்பாட்டு உரப்பைகளும் லொக்ரியூப் தண்ணீர்ப் பீப்பாக்களுமறியும். யானைக் காற்தடங்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரும் காட்டுத் தண்ணீர் கொடிகளும் அறியும் தாகம் சுமந்தலைந்த  உங்கள் நெடுந்தூரப் பயணங்களை.

கழுத்தளவு தண்ணீரில் நடுங்கும் உதடுகளோடு மௌனமாய் நீங்கள் நடந்த அமாவாசை இருட்டுக்களின் கடினங்களை உங்கள் மேனிகளை துளைத்துப் பிடுங்கிய நீரட்டைகள் அறியும். 

நீங்கள் பதுங்குழிகள் வெட்டப் பட்ட பாடுகளையும் மாதக்கணக்கில் குளிக்காதிருந்த சிரமங்களின் வலிகளையும்  பொறிபறக்கும் மணலாற்றுக் காட்டுமண் அறியும். 

நீங்கள் இரவுகளில் சிந்திய இரகசிய உழைப்புக்களை நிலவறியும். உங்கள் தூங்காவிழிகளின் களைப்பை காவற் கடைமைகள் அறியும். கட்டைகள் வெளுத்துப் பிளந்த பெருவிரல் ,நகத்தசைகள் அறியும் உங்கள் பாதங்கள் நடந்த வலிகளை. நீங்கள் தலைசாய்த்துக் கிடந்த கறையான் புற்றுக்களறியும் தாய்மார் மீதான உங்கள் பாசத்தை. கானகத்தின் மெனமறியும் உங்கள் காதல் பிரிவின் வலிகளை. பௌர்ணமி நிலவும் பட்ட மரமும் வெட்டவெளிப் பனியும் ஒற்றைப் பனை மரமும் ஆட்காட்டிப் பறவையும் அறியும் நீங்கள் சொல்லாது ஒளித்த குடும்பங்களைப் பிரிந்த உங்கள் வலியின் கண்ணீர்த் துளிகளை.நீங்கள் விதைகுழிகள் மீது அள்ளிச் சொரிந்த பிடிமண் அறியும் தோழர்களைப் பிரிந்த உங்கள் துயர்.நீங்கள் சுமந்த துப்பாக்கிகள் அறியும் மண்மீதான உங்களின் பற்றுதலை. உங்களுக்கு உணவளித்த மக்களறிவர் தம் விடுதலை மீதான உங்கள் கரிசனையை.

 காட்டுப் பூக்களும்...கடற்கரை மணலும்...
ஆறுகளும் அருவிகளும் மேடு பள்ளங்களும்
பனைகளும் பற்றைகளும் முட்கம்பிகளும்
சூனியப் பிரதேசங்களும் சுடுநிலமும்
துயிலுமில்லங்களும் துணையிருந்த மண்ணும் 
சாக்குத் தொப்பிகளும் சப்பாத்துக்களும் வரிப்புலி உடைகளும் 
வோக்கி டோக்கிகளும்
 மாரி மழையும் மாசிப் பனியும் எரிதணல் காற்றும் 
சுடுநில வெயிலும் அறியும் நீங்கள் சுமந்தசிலுவைகள்.

உங்கள்உறுதியை....ஓர்மத்தை..தியாகத்தை.. அர்ப்பணிப்பை..விசுவாசத்தை..நம்பிக்கையை..நீங்கள் நேசித்த உங்கள் தலைவனறிவான். உங்கள் மரணத்தின் பின்னுள்ள அர்த்தத்தை..சத்தியத்தை..உங்கள் தாய்நிலம் அறியும்.

தீபிகா
26.11.2017.
05.22 மாலை.