உச்ச நீதிமன்றம் சொன்ன திட்டம் காவிரி மேலாண்மை வாரியம்தான்!

March 10, 2018

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் என்பது காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 4 மாநில அரசு செயலர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இதில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அரசு செயலர்கள், காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் சென்னை திரும்பிய அதிகாரிகள், டெல்லியில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட விஷயங்களை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் ஆணைகளை செயல்படுத்துவதற்கு ஒரு “திட்டத்தை” ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள “திட்டம்” என்னவென்பதை 1956ஆம் ஆண்டைய பன்மாநில நதிநீர் தாவா சட்டம் பிரிவு 6(ஏ)(2)ல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, “திட்டம்” என்பது, நடுவர் மன்ற இறுதி ஆணையையும், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள், அதிகார வரம்புகள் மற்றும் செயல்பாடுகள் ஆகியன வரையறுக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம், அதன் 16.2.2018 நாளிட்ட தீர்ப்பில், பத்தி 397ல், நீர்ப் பங்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதைத் தவிர, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர இனங்களில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது தவிர, பத்தி 399ல், காவேரி நடுவர் மன்றம், நீர் முறைப்படுத்தும் குழு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய நீர்வளக் குழுமம் ஆகியவற்றின் உதவியோடு நீர் விடுவிப்பதை மாதாந்திர வாரியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

மேற்கண்ட தீர்ப்பின்படி, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட “திட்டம்” என்பது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு தான் என்றும், அவ்வாணையில் அதிகார வரம்புகளுடன் இவ்வமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உள்ள நிலையில், காவேரி மேலாண்மை வாரியத்தை, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு மாற்று வழி இல்லை என தமிழ்நாடு அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டது. 

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சார்பில் 9.3.2018 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில், மேற்கண்ட கருத்துக்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

காவேரி நதிநீர் பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவேரி நீரை ஆதாரமாகக் கொண்ட தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும்  அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

செய்திகள்
சனி செப்டம்பர் 15, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை விவகாரத்தில் அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

புதன் செப்டம்பர் 12, 2018

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி  இன்று டெல்லியில்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை