உடன்பாடற்ற பிரெக்சிற்றை ஏற்றுக்கொள்ள தயாராகிறது பிரான்ஸ்!

Friday October 05, 2018

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான காலப்பகுதியே உள்ள நிலையில், உடன்பாடற்ற பிரெக்சிற்றை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் தயாராகின்றது.

பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பிரெக்சிற் உடன்பாட்டைவிட, உடன்பாடுகளற்ற பிரெக்சிற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பிரான்ஸ் மாறியுள்ளது.

குறிப்பாக பிரெக்சிற்றின் பின்னர் ஏற்படும் தாக்கத்தை கையாளும் வகையிலான சட்டமூலமொன்றை, பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் Nathalie Loiseau கடந்த புதன்கிழமை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், பிரெக்சிற் தொடர்பாக சாதகமானதும் இலகுவானதுமான நிலைமைகளை எட்டுவது அவசியமெனக் குறிப்பிட்டார். நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் பரஸ்பர உறவை நீடிக்க தமது நாடு விரும்புவதாக குறிப்பிட்ட அவர், பிரான்ஸிலுள்ள பிரித்தானியா மக்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுமென கூறியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸிலுள்ள பிரித்தானிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க முனையும் பிரான்ஸ், பிரித்தானியாவில் வசிக்கும் தமது நாட்டு பிரஜைகளின் உரிமையும் அவ்வாறே பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.