உண்ணாவிரதம் இருந்த தலைவர்களை குண்டுக்கட்டாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்த காவல் துறை!

புதன் ஏப்ரல் 11, 2018

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களை காவல் துறை  வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்ததாக கட்சி எம்.பி. குற்றம்சாட்டினார். 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். 

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தபின்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 முக்கிய தலைவர்கள் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் கடந்த 6ம் திகதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அவர்களில் 3 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுப்பு செய்யப்பட்டனர். மிதுன் ரெட்டி, அவினாஷ் ரெட்டி ஆகியோர் தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

அவர்களின் உண்ணாவிரத போராட்டம்  இன்று 6-வது நாளை எட்டியது. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆந்திர பவனுக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஆம்புலன்சை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருந்த இரண்டு தலைவர்களையும் போலீசார் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தடுத்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. விஜயசாய் ரெட்டி குற்றம்சாட்டினார்.