உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்!

திங்கள் ஜூன் 11, 2018

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது நேற்றிரவு (10.06.2018) மர்ம நபர்கள் திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   

தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக நேற்றிரவு உழவன் தொடர்வண்டியில் ஏறுவதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் சீனிவாசனின் இரு சக்கர ஊர்தியில் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரில் இரு சக்கர ஊர்திகளில் வந்த இருவர், தஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர்.

ஊர்தியில் பின்னால் அமர்ந்திருந்தவன் தோழர் பெ.ம. அவர்களின் இடது கையை இழுத்து கீழே தள்ளிவிட, அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தோழர் பெ.ம. அவர்களுக்கு, இடது முழங்காலில் கடுமையான காயமும் வலது கையிலும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பின் தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்தப்பட்ட முறையும், தோழர் பெ.ம. அவர்கள் எழுதுகின்ற வலது கையை குறிவைத்துத் தாக்கியதும், இது திருட்டுக்காக நடத்தப்பட்டத் தாக்குதல் அல்ல என உணர்த்துகிறது. இதுகுறித்து தஞ்சை தெற்கு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.  

காவிரிக்கான ஐ.பி.எல். மற்றும் ஸ்டெர்லைட் போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் முன்னணி ஆற்றல்களாக இருந்து போராடும் இயக்கங்களை ஒடுக்க இந்திய – தமிழ்நாடு அரசுகள் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் இருவர் மீது குண்டர் சட்டத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட நா.த.க. தோழர்கள் பல்வேறு வழக்குகளிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் பேசிய இயக்குநர் அமீர் மீது ஆரியத்துவ வெறியர்கள் அத்துமீறித் தாக்க முயன்றனர். இச்செயலை அனைவரும் கண்டித்து வரும் நிலையில், இந்திய – தமிழ்நாடு அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துத் தளத்திலும், களப்போராட்டங்களிலும் உடனுக்குடன் எதிர்வினையாற்றி வரும் தோழர் பெ.ம. அவர்கள் மீது தாக்குதல்ல நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீது வடநாட்டில் நடைபெற்று வரும் தாக்குதல்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் இந்திய – தமிழ்நாடு அரசுகளின் எதேச்சாதிகாரப் போக்குகளைக் கண்டிப்போர்க்கும், அதற்கு எதிராகப் போராடுவோர்க்கும் அச்சுறுத்தல் விடுக்கும் நிகழ்வாகவே இது தெரிகிறது. தோழர் பெ.ம. மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக விரைந்து விசாரித்து தாக்குதல் நடத்திய உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்! இதை வலியுறுத்தி, தமிழ்நாடெங்கும் தோழமை அமைப்புகளையும் தமிழின உணர்வாளர்களையும் திரட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நாளை (12.06.2018), கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.