உதயங்க வீரதுங்கவின் மனு விசாரணை மார்ச் 29ஆம் திகதி!

Wednesday December 06, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும் ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு  நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2005 - 2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது நிதிமோசடி செய்தார் என்று உதயங்கவுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், சர்வதேசகாவல் துறை  ஊடாகக் கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் கடந்த வருடம் ஒக்டோபர் 20ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்துச்செய்யுமாறும் அதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி அப், நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவர் அடங்கிய குழு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட திகதி அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.