உயர் கல்விக்கு வழிகாட்டல் கண்காட்சி!

Saturday January 12, 2019

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று(11) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது மேலும் குறிப்பிட்ட அவர்,

இக்கண்காட்சியானது எதிர்வரும் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளைக் கொண்ட சுமார் 10 இற்கு மேற்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இக்கண்காட்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர் களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கைநெறியில் 30 தொடக்கம் 50 வீதம் வரையான கட்டணக் கழிவு வழங்குவதோடு கண்காட்சியில் வைத்தே பல்கலைக்கழகங்களுக்கான உடனடி அனுமதியும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் கண்காட்சியின் போது கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களுடன் பங்குபற்றும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

தமிழ் மொழி மூலமான மாணவர்கள் இந்தியாவில் கற்கை நெறிகளை தடையின்றி தொடர ஆங்கில மொழி விருத்தியினைத் தூண்டும் வகையில் கற்கை நெறிகளுக்கு ஆரம்ப நிலை ஆங்கிலக் கற்கைகள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும்.

கல்வி கண்காட்சியில் பங்குபெற்று தமது பெயர்களை பதிவு செய்துகொள்ளும் மாணவர்களில் இருந்து இரு தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ரப் (TAP) ஒன்று பரிசாக வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்திய தூதரகமானது முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில், மவுலானா ஆசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப் பரிசில், காமன்வெல்த் புலமைப்பரிசில்கள் பட்டக்கல்வி முதல் முதுநிலை கல்வி வரை வழங்கப்பட்டு வருகிறது.

இப் புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி ஜனவரி 25-ம் திகதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.  புலமைப் பரிசிலுக்கு விண்ணப்ப வர்கள் அவைதொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.

இவை தொடர்பில் மேலதிக விளக்கங்களை அலுவலக நாட்களில் இந்தியத் துணைத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் - என்றார்.