உயிரிழந்த ஜமால் கசோஜி !

Monday October 22, 2018

பிரபல பத்திரிகையாளரும், சௌதி அரசின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது.

காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். முதலில் இதனை மறுத்த சௌதி அரேபியா, பின்னர் ஜமால் இறந்து விட்டதை ஒப்புக் கொண்டது.

ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து தெரிந்தும் தெரியாமல் இருக்கும் தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

யார் இந்த ஜமால்?

சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்?

இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.

ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.

ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 - 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.

ஜமால் 2017 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் செளதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.

கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர் செளைதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய முதல் பத்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

தூதரகம் சென்றது எதற்கு?

ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருந்தார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு செப்டம்பர் 28ஆம் தேதியன்று சென்றார்.

"துருக்கி மண்ணில் ஏதும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்பியதால், இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்திற்கு செல்ல ஜமால் தயங்கவில்லை" என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஹெடிஸ் செஞ்சிஸ் (ஜமால் திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்) எழுதியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட, அவர் 1:14 மணிக்கு தூதரகத்தை வந்தடைந்தார் என சிசிடிவியில் பதிவான காட்சிகளில் தெரிய வந்துள்ளது.

முதல்முறை வந்தபோது நல்ல விதமாக தாம் நடத்தப்பட்டதால், இரண்டாவது முறை எந்த பிரச்சனையும் இருக்காது என ஜமால் அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

தூதரகத்திற்கு வெளியே காதலியிடம் செல்பேசியை கொடுத்துவிட்டு சென்ற அவர், தான் திரும்பி வராவிட்டால், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

தூதரகத்திற்கு வெளியே ஹெடிஸ் 11 மணி நேரங்கள் காத்திருந்தும் ஜமால் வரவில்லை. மீண்டும் அடுத்த நாள் அங்கு சென்றபோதும் அவர் அங்கு இல்லை.

சௌதி அரேபியா கூறியது என்ன?

கசோஜி எங்கிருக்கிறார் என்று தெரியாது என இரண்டு வாரங்களுக்கு மேலாக சௌதி அரேபியா கூறி வந்தது.

ஜமாலுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள சௌதி மக்களும் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்ட சௌதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சில நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரத்தில்" தூதரகத்தில் இருந்து ஜமால் புறப்பட்டுவிட்டதாக கூறினார்.

"தங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜமால் கொலை செய்யப்ட்டார் என்று வரும் தகவல்கள் எல்லாம் பொய் மற்றும் அடிப்படை ஆதாரமற்றது என இளவரசர் சல்மானின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சௌதி தூதருமான காலித் பின் சல்மான் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அக்டோபர் 20ஆம் தேதியன்று சௌதி அரசு தொலைக்காட்சி செய்திபடி, ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்ததாகவும், அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து செளதி ராஜ நீதிமன்றத்தின் முக்கிய நபராகவும், இளவரசர் முகமத் பின் சல்மானுக்கு ஆலோசகராகவும் இருந்த செளத் அல் கதானி மற்றும் மேஜர் ஜெனரல் அகமத் அல் அசிரி ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதல்கட்ட விசாரணைகள் நடத்த இளவரசர் தலைமையில் கமிட்டி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜமால் குறித்து துருக்கி என்ன கூறியது?

தூதரகத்தினுள் கசோஜி துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல் அங்கிருந்து நீக்கப்பட்டதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு மற்றும் காணொளி சான்றுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

"ஜமாலின் குரலும், மேலும் சில ஆண்கள் அரபு மொழியில் பேசுவதையும் அந்த ஒலிப்பதிவில் கேட்க முடிகிறது" என வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டுள்ள ஆதாரம் ஒன்று குறிப்பிட்டது.

"அவர் எப்படி துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்றும் கேட்க முடிகிறது"

குற்றஞ்சாட்டப்பட்ட சௌதி முகவர்கள் யார் யார்?

ஜமால் காணமால் போன நாளன்று இஸ்தான்புல்லில் இருந்து விமானம் மூலம் சென்ற மற்றும் இஸ்தான்புல்லுக்கு வந்த சந்தேகத்திற்குரிய 15 நபர்கள் அடங்கிய குழுவை அடையாளம் கண்டுள்ளதாக துருக்கி ஊடகம் தெரிவிக்கிறது.

அதில் ஒருவர் மஹெர் முத்ரெப். இவர் சௌதி புலனாய்வில் கலோனலாக பணியாற்றினார்.

மேலும் நான்கு நபர்கள் சௌதி முடியரசருக்கு தொடர்புடையவர்கள் என்றும் மற்றொருவர் அந்நாட்டின் உள்துறையின் மூத்த நபர் என்றும் கூறப்படுகிறது.

கசோஜி தூதரகத்துக்கு சென்ற அதே நாளில் சுமார் 3:15 மணிக்கு, 9 நபர்கள் சௌதி தலைநகர் ரியாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக அங்கு வந்தடைந்ததாகவும் கூறப்பட்டது.

சந்தேகிக்கக்கூடிய மற்ற நபர்கள் அதே நாளில் பின்னர் தனி விமானம் அல்லது வணிக விமானங்கள் மூலமாக வந்திருக்கலாம். அவர்கள் அனைவரும் தூதரகத்திற்கு அருகில் உள்ள இரண்டு ஹோட்டல்களில் தங்கியிருந்தார்கள்.

இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக சௌதி நபர்கள் வருவது மற்றும் ஹோட்டலுக்குள் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் துருக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் அக்காட்சிகளில், கசோஜி தூதரகத்துக்கு வருவதற்கு முன்னாள் சில வாகனங்கள் உள்ளே சென்றதும் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் சில கருப்பு வேன்களும் அடங்கும்.

கசோஜி வரும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஏதோ ஒரு வேனில் அருகில் உள்ள இடத்தில் இருந்து சென்ற நபர்கள் இருந்துள்ளனர்.

பின்னர் அந்த குழுவினர் இரண்டு தனியார் விமானங்கள் மூலம் கைரோ மற்றும் துபாய் வழியாக ரியாத்துக்கு சென்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி ஊடகங்களின்படி இதுவரை நடந்த சம்பவங்கள்

03:28: சந்தேகத்திற்குரிய செளதி முகவர்களை கொண்ட முதல் தனியார் ஜெட் விமானம் இஸ்தான்புல் விமான நிலையத்துக்குள் நுழைகிறது.

05:05: அந்த குழு செளதி தூதரக கட்டட்த்திற்கு அருகில் இருக்கும் இரண்டு விடுதிக்குள் செல்வதை காண முடிகிறது.

12:13: தூதரக அதிகாரிகளின் வாகனங்கள் தூதரகத்திற்கு வருவது படம் பிடிக்கப்பட்டது. அதில் செளதி முகவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

13:14: கசோஜி கட்டடத்துக்குள் நுழைகிறார்

13:14: தூதுரகத்தில் இருந்து வாகனங்கள் புறப்பட்டன. சந்தேகத்திற்குரிய செளதி தூதரக அதிகாரியின் குடியிருப்புக்கு வாகனம் வருவது படம் பிடிக்கப்படுகிறது

17:15: சந்தேகத்திற்குரிய செளதி அதிகாரிகளை கொண்ட இரண்டாவது தனியார் ஜெட் விமானம் இஸ்தான்புல்லில் தரை இறங்கியது.

17:33: தூதரகத்துக்கு வெளியே கசோஜியை மணமுடிக்கவிருந்த பெண் காத்திருந்தார்.

18:20: இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. மற்றொரு விமானம் இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டது.

துருக்கியின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது?

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி துருக்கி காவல்துறையினருக்கு சௌதி தூதரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

சில சௌதி அதிகாரிகள் மற்றும் சுத்தம் செய்யும் குழுவினர் அக்கட்டத்திற்குள் நுழைந்ததையடுத்து அவர்கள் அங்கு சென்றனர்

தூதரகம் மற்றும் அதன் அருகில் உள்ள சௌதி தூதரகத்தின் குடியிருப்பில் தேடிய காவல்துறையினர், டி என் ஏ சோதனைக்கு தேவையான சில மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

அருகில் உள்ள காட்டிலும், யலோவின் வயல்வெளிகளிலும் அவர்கள் தேடினர். ஏனெனில் ஜமால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தினத்தில் இரண்டு சௌதி தூதரக வாகனங்கள் அந்த வழியை நோக்கி சென்றுள்ளது.

கசோஜியின் உடல் காட்டிலோ அல்லது வயல்வெளியிலோ அகற்றப்பட்டிருக்கலாம் என பெயர் வெளியிடாத சில துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் பணிபுரிந்து வந்த துருக்கி நாட்டை சேர்ந்த 15 பேரை கேள்வி கேட்டு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப ஊழியர்கள், வரவேற்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் ஓட்டுனர் ஆகியோரிடம் சாட்சியங்கள் வாங்கப்பட்டது.