உறுதி, துணிவு, வெற்றி வரலாறொன்று ஓய்ந்தது - ஈழமுரசு

December 11, 2016

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் எதிர்பாராத இழப்பு தமிழக மக்களை மட்டுமல்ல, ஈழத் தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து குணமாகி மீண்டும் ஆட்சியை நடத்துவார் என்ற நம்பிக்கைகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது மரணச்செய்தி வெளியாகி பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

2009 பாரிய இனஅழிப்பின் பின்னர் சோர்ந்து போய்க்கிடந்த ஈழத் தமிழர்களின் நெஞ்சங்களில் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயலலிதா அம்மையார் என்றால் அது மிகையில்லை. அதனால்தான் தமிழக முதல்வர்களில் முன்னாள் முதல்வர் எம்.ஜீ.இராமச்சந்திரன் அவர்களுக்குப் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் மிகுந்த அன்புக்கும் - மரியாதைக்கும் - நம்பிக்கைக்கும் உரியவராக ஜெயலலிதா அம்மையார் மாறினார்.

தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் எத்தனையோ செயல்களைச் செய்த அம்மையார், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் தனது குரலை ஆழமாக பதிந்துவிட்டே சென்றிருக்கின்றார். ‘தமிழீழம்’ என்ற ஒற்றைச் சொல்லையே உச்சரிப்பதற்கு அஞ்சுபவர்கள் மத்தியில், ‘தனித் தமிழீழம் அமைத்துக் கொடுப்பேன்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகின்ற அளவிற்கு அவர் துணிவுக் கொண்டிருந்தவர். இவரைப்போல் வேறு ஒரு தலைவரால் இவ்வாறான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர முடியுமா என்பது கேள்விக்குரியதே.

‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை’ என்றும், ‘தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்றும், ‘இனப்படுகொலை புரிந்த சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், ‘இனப்படுகொலைக்கு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்’ என்றும், ‘சிறீலங்கா இந்தியாவின் நட்பு நாடு அல்ல என அறிவிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி பல்வேறு துணிகரமான தீர்மானங்களை தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றியவர்.

மத்திய அரசின் ஆளுமையை மீறி ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக எதனையும் செய்துவிட முடியாதபோதும் தனது அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு தன் ஆட்சி அதிகார வரம்பிற்கு உட்பட்ட, தன்னால் முடிந்தளவிற்கு முயன்றவர் ஜெயலலிதா அம்மையார். ஆட்சியில் இருக்கும்போது எந்தவொரு தலைவர்களும் கொடுக்கத் தயங்கும் தார்மீக ஆதரவை துணிச்சலோடு ஈழத் தமிழர்களுக்காகக் கொடுத்தவர் ஜெயலலிதா. அவரது துணிச்சலைப் பார்த்து சிங்களப் பேரினவாதிகளே அச்சப்பட்டனர், கடும் சினமடைந்தனர். அதனால்தான், அவரைக் கொச்சைப்படுத்தும் மிகக் கேவலமான பிரச்சாரங்களைக்கூட சிங்களப் பேரினவாத ஊடகங்கள் செய்ததை வரலாற்றில் யாரும் மறைக்க முடியாது.

ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தில், எந்தனையோ அவமானங்களுக்கும் மத்தியில் முட்டிமோதி தன்னம்பிக்கையோடு எழுந்தவர் ஜெயலலிதா அம்மையார். மனத்திடமும் துணிச்சலும் மிக்க ஒரு உறுதியான தலைவர். எடுத்த முடிவில் எத்தனை நெருக்கடி, எத்தனை தடைகள் வந்தபோதும் சமரசமின்றி உறுதியான நடவடிக்கையை எடுத்து வெற்றிபெறுபவர் என்பதைப் பலமுறை நிரூபித்தார்.

தமிழர்கள் மீதான இனஅழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய அரசியல், ஆட்சி அதிகார பலம் இருந்தும், அந்த இனப்படுகொலைக்கு துணைபோய்க்கொண்டிருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி இல்லாமல் அப்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இருந்திருந்தால் தமிழர்கள் இவ்வளவு பேரழிவைச் சந்திருக்கவேண்டி வந்திருக்காது என்று அப்போது வாய்விட்டுக் கதறியவர்கள் ஈழத் தமிழர்கள். இப்போது அவருக்காக ஈழத் தமிழினம் கண்ணீர் சிந்தி நிற்கின்றது.

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைத்த வரலாறு ஒன்று இப்போது ஓய்ந்துவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக உறுதியோடு குரல்கொடுத்த ஒரு பலம்மிக்க சக்தியை ஈழத் தமிழினம் இழந்து நிற்கின்றது. தமிழக முதல்வரின் இழப்பு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகவே அமைந்துவிட்டது.

இந்தவேளையில், தமிழக மக்களினதும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களினதும் தொண்டர்களினதும் ஆழ்ந்த வேதனையில் பிரான்சின் ஊடகமையமும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

ஈழமுரசு
ஊடகமையம்

செய்திகள்
திங்கள் June 25, 2018

உலக வெண்புள்ளி தினமானது ஆண்டுதோறும் ஜூன் 25-ம் திகதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!