உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல!

செவ்வாய் டிசம்பர் 04, 2018

கடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால் தான் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

புவி வெப்பமடைதலுக்குக் காரணமான மனித உற்பத்தி மற்றும் பல சீரழிவு நடவடிக்கைகளினால் கடல் நீர்மட்டம் சராசரியாக உயரும் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடரவே செய்யும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த காலத்தில் முன்னறிவிப்பாளர்கள் உலக அளவில் கடல் நீர்மட்ட அதிகரிப்பு விகிதத்தை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அதனால் ஆண்டுக்கு 3 மிமீ வரை கடல் நீர்மட்டம் உயரும்,  ஆனால் சாட்டிலைட் பயன்பாட்டினால் அதன் பிராந்திய கடல் பகுதிகளின் கூடுதல் தாக்கமும் தெரிய வந்துள்ளது.

புதிய உத்திகள், உயர் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படும் கணிப்பில் 1993ம் ஆண்டு முதல் கடல் நீரமட்ட உயர்வை ஆய்வு செய்கின்றனர், இதில் கடல் மேற்பரப்பு உயரங்கள் பற்றிய ஆய்வும், கணக்கீடும் அடங்கும்.

அதாவது உலக அளவில் சராசரி கடல் நீர்மட்ட அதிகரிப்பு மற்றும் சில பிராந்திய கடல் நீர்மட்ட அதிகரிப்பு அந்த சராசரியிலிருந்து எப்படி மாறுபட்டு உயருகிறது என்பதையும் இந்த ஆய்வு சுத்தமாக வரைபட மாதிரியாக்கியுள்ளது.

உதாரணமாக அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் ஆண்டு சராசரியக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியாவில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதைக் காண முடிகிறது.

இந்த ஆய்வின் படி சில பிராந்தியங்களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு உலக சராசரியைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

சராசரியைக் காட்டிலும் அதிகமாகும் கடல் நீர்மட்டம் என்பது மனித காரணங்களினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களினாலேயே என்றும் இயற்கையாக மாறும் கடல்சார் சூழல்களினால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் பிராந்திய கடல்நீர்மட்ட உயர்வு சில சமயங்களில் இயற்கை சுழற்சியினால் ஏற்படும் தாக்கங்களைப் போன்று இருக்கும். எனவே இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இது  குறித்து அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல் ஆய்வு தேசிய மையத்தின் (ncar) ஜான் ஃபாஸுல்லோ கூறும்போது, “பிராந்திய கடல் நீர் மட்ட அதிகரிப்பின் வகை மாதிரிகளில் பருவநிலை மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்துகிறது என்று தெரியும். அதே சமயத்தில் இது எதிர்கால பருவநிலை மாற்றத்தையும் பெரிய அளவில் தூண்டி விடும்.

இந்த நூற்றாண்டின் சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் மேலும் 2 -3 அடி கூடுதலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் ''பிராந்திய வாரியாக இதில் ஏற்படும் மாற்றங்கள் கடற்கரை பகுதி மக்களுக்கு மிக முக்கியமனது. அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கிறார்.