உழவுத்தொழிலைப் பாதுகாக்க உறுதியேற்போம் - தொல்.திருமாவளவன்

Sunday January 14, 2018

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் விழா மட்டுமே மதம் சார்ந்தஅடையாளங்கள் ஏதுமில்லாப் பண்டிகையாகும். உழவுத் தொழிலையும் உழவுக் கருவிகளையும் உழவர் சமூகத்தையும் போற்றுகிறச் சிறப்புடையப் பொங்கல் விழாவில், உழவருக்குத் துணையாயிருக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்பாட்டை கொண்ட இனம்தான் தமிழினமாகும்.

‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று அய்யன் திருவள்ளுவன் உழவுத்தொழிலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றி மெச்சியிருப்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று உழவுத் தொழில் மற்றும் உழவர் சமூகத்தின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கிற போது நெஞ்சுப் பதறுகிறது.  விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைச் செய்து மாளும் அவலம் உருவாகியுள்ளது. விளைநிலங்கள் யாவும் பாலை நிலங்களாக மாறிவருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிக்கப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. மீத்தேன், ஷேல் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பதற்கானப்  பூதக் கிணறுகளாக மாறிவருகின்றன.

விவசாயக் குடும்பங்கள் இடம் பெயர்ந்தும் புலம் பெயர்ந்து  சொந்த மண்ணைவிட்டு வெளியேறுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் இயற்கை பொய்த்துப் போனது மட்டுமின்றி, மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், விவசாயக் கொள்கைகளும் தாம் காரணங்களாகும்.

இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு, விவசாயக் குடும்பங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடவும்
தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் சூழ்ந்து வரும் சாதிய-மதவாத அரசின் தீங்குகளிலிருந்தும் மக்களை பாதுகாத்திடவும் பொங்கல் திருநாளில் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதியேற்போம்.

தமிழர் திருநாள் வெறுமெனக் கூடிக் கலையும் கொண்டாட்டத் திருநாளாக இல்லாமல் மண்ணையும் மக்களையும் குறிப்பாக உழவுத்தொழிலையும்  காப்பதற்கான சூளுரை ஏற்கும்  நாளாக கொண்டாடுவோம்.

இவண்
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.