ஊடகவியலாளர்களின் பணிக்கு படைத்தரப்பு இடையூறு ஏற்படுத்தாது

Monday April 16, 2018

ஊடகவியலாளர்களுக்கு இனிமேல் இராணுவம் இடையூறுகளை ஏற்படுத்தாது என சிறிலங்கா படைத்துறை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக எழுத்துமூலம் உறுதியளித்துள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே படையினர் இந்த உறுதிமொழியை வழங்கினர். 

கடந்த (2017) மாவீரர் தினத்தன்று அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை கடந்த மாதம் 19 ம் திகதி வழிமறித்த இராணுவம் அவரது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்ததோடு அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர். 

இந்நிலையில் தனது ஊடகப்பணிக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் மற்றும் இராணுவ தரப்பினரை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற விசாரணையில், நடைபெற்ற விடயங்களை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு குறித்த ஊடகவியலாளர், தான் மற்றும் சக ஊடகவியலாளர்கள் சுயாதினமாக பணிபுரிய இராணுவம் இடையூறு வழங்ககூடாது எனக் கேட்டுக்கொண்டார். 

மேலும், தனக்கு உயிராபத்தை விளைவிக்க கூடிய யாரும் தமது பிரதேசத்தில் இல்லை எனவும் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அதற்கு இராணுவ தரப்பே பொறுப்பு எனவும் கூறிய ஊடகவியலாளர் அவ்வாறு எந்த ஒரு நிகழ்வும் இராணுவத்தால் நிகழாது என உத்தரவாதம் தரவேண்டும் எனக் கோரினார். 

ஊடகவியலாளரின் கோரிக்கைக்கு படைத்தரப்பு இணங்கியது. அவ்வாறு இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இடையூறுகள் ஏற்படுத்தப்படமாட்டாது என எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது.