ஊவா முதலமைச்சருக்கு மீண்டும் கல்வி அமைச்சுப் பதவி!

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபரை அவமரியாதைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மீண்டும் மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அதிபரை தமது இல்லத்துக்கு அழைத்து அவமரியாதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில், மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக நீதிமன்ற விசாரணை இடம்பெறுகிறது.
இந்தநிலையில் அவர் வகித்துவந்த மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பு, செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் அவருக்கே மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை நீதியான செயற்பாடு இல்லை என்று இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் தமக்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் மாகாண ஆளுநரால் இந்த அமைச்சுப் பொறுப்பு மீள கையளிக்கப்பட்டதாக, ஊவா மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.