எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை!

Sunday September 09, 2018

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 75 பேரின் மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இறுதி செய்துள்ளது.

எகிப்தில் சுமார் 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி 2011-ம் ஆண்டு வீழ்ந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.

எனினும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இதனால் அவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதையடுத்து மோர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தெற்கு எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு நிகழ்ந்தது. பதவி நீக்கப்பட்ட மோர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டுமென்று வலியுறுத்தி இந்த வன்முறை நிகழ்ந்தது. இதுதொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வன்முறை வழக்கில் பலருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 75 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இன்று உறுதி செய்தது.