எங்கள் வேரோடிய மண்ணில் எழுச்சி குரலோன்!

February 27, 2017

தமிழீழத்தின் விடுதலைத் தாகத்தை விதைத்த எஞ்சிய குரல் ஒன்று நம் மண்ணில் விதையாகிது!

தமிழின விடுதலைப் போராட்டத்தினை பல தளங்களில் தனது குரலினால் பலப்படுத்தியவரும், பிட்டுக்கு மண்சுமந்த பாடலை பாடிய குரல் ஓய்ந்தது!!!

ஈழப் போராட்டத்தை வாய்வழியாக பாடி காதுவழியா அனுப்பி போராட்டத்தை வலுவடைய செய்த அந்த ஆரம்பகால/கம்பீரமான/தனிக்குரல் அது.....!!!

மீண்டும் மீண்டும்
புதிதாய் நாங்கள் முளைப்போம்
இந்த மண்ணில்!

இந்த மூச்சும் உந்தன்
காற்றில் கலந்து
மூட்டும் தீயை கண்ணில்.......

எங்கள் மண்ணின் விடுதலையெழுச்சிக் குரல் இந்த மண்ணை விட்டு உடலாகப் பிரிந்தாலும் விடுதலை பாடல்களாக எம் உயிருடனே கலந்து வாழ்கிறார்.

..இவர் மண்ணுக்காக பாடியபாடல்கள் எல்லாமே பலத்தையும் வளத்தையும் எமது போராட்டத்திற்கு மென்மேலும் வலுச்சேர்த்தவை வீட்டிலிருந்த காலத்தைவிட இவர் எங்களோடு பயணித்த காலங்கள் கூடுதலானவை...

விடுதலைத் தீயீனை
தன் குரலால் வளர்த்தவன்.
இப்போதும் இவன் பாடிய,
'இந்த மண் எங்களின் சொந்த மண்'
மக்களின் விடுதலை முழக்கமாகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

பாடகர் எஸ்.ஜே.சாந்தன் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் 2.10 அளவில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பாடகர் சாந்தனுக்கு இன்று இருதடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.

முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்.......
************

தமிழீழ தேசத்தின் திசையாவிலும், புலம் பெயர்ந்த தேசங்களிலும்,  தமிழீழ மாவீரர்களின் ஈகங்களையும், தமிழீழத் தேசியத் தலைவரின் புகழையும், போராளிகளின் - மக்களின் விடுதலை வாழ்வையும் தன் ஆற்றலால் பாடிநின்ற ஈழத்தின் போர்க்குயில் ஒன்று ஓய்ந்துவிட்டது.

விடுதலைக்கு நாளும் பொழுதும் உழைத்து நின்ற போதிலும், விடுதலை உணர்வோடு தான் பெற்ற பிள்ளைகளின் உழைப்பும் தேசத்திற்கு இருக்க வேண்டும் எனும் நோக்குடன் மூத்த மகன் மாவீரர் மேஜர் கானகன் அவர்களை சிறு வயதிலிருந்தே தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடவைத்து தானும் இணைந்து பாடி அன்றைய யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஈடுபடுத்தினார் அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுச்சி நிகழ்வில் கானகன் சிறுவனாக பாடசாலை சீருடையுடன் தந்தையு டன் எம்மை நினைத்து யாரும் களங்கக்கூடாது என்ற தந்தை பாடிய பாடலை அவருடனே பாடியதை என்றும் மறந்ததில்லை யாரும்..........  பின்னர் சில காலம் கழித்து மூத்த மகன் மேஜர் கானகன் ஜெயசிக்குறு எதிர்ச் சமரில் மாவீரனாக...........  இப்படியே நின்ற பாடகர் எஸ். ஜீ. சாந்தன் அவர்கிளின் விடுதலைமீதான உழைப்பு அவரின் மகன் கப்டன் இசையரசன் (2009 எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு) போராளியாகி, தந்தை தொடர்ந்த இசைப்பயணத்தை அவரும் தொடர்ந்தார். பல இடங்களின் நடைபெற்ற இசைக்குழு நிகழ்வுகளில் தந்தையும் மகனையும் காணலாம்.

தந்தையும் மகனுமாகிய இசையரசனும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் தீயில் எழும் தீரம் எனும் இருவாட்டில் ஒன்றாக ஒரு பாடலை பாடியுள்ளார்கள்.

தமக்கு தமிழன்னை இவர்களுக்கு அருளிய இசைக்க கலையை வைத்து விடுதலைக்காக உழைத்த இவரின் வாழ்வில் ஆயிரம் சொல்ல முடியாத சோக பக்கங்களும் உள்ளன.

 குணம் பெற்று வருவாய் என தவித்திருந்தோ ஆயினும் அங்கிருந்து வந்த செய்தியால்.................... கலங்கி நிற்கிறோம்.

ஈழம் முதல் புலம் வரை எத்தனையோ குயில்கள் கூவும் குரல்கள் தாயக மண்ணில் நீ இறுதிவரை தேசியம் பற்றி கூவிச் சென்றன ஐயா.........

குயிலே பாடு பாடு என நீ பாடினாய் உந்தன் பிரிவின் சோகம் வன்னி சோலைக் குயிலும் சோகமாக பாடிநிற்கும். தேசிய இனத்தோடு  முள்ளிவாய்க்கால்வரை பயணித்து; இரு மகவைகளை விடுதலைக்கு உரமாக கொடுத்து தமிழினத்தின் நெஞ்சங்களை தவிக்க விட்டு காலனும் எம்மிடம் இருந்து உம்மை பிரிந்த்துவிட்டான்.

என்றும் வாழுவீர் எங்கள் வேரோடிய மண்ணில் எழுச்சிக்கு குரலோனாக...........

- பிரிவின் துயரால் ஈழத்து நிலவன் -
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

செய்திகள்
சனி April 21, 2018

புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...

ஞாயிறு April 08, 2018

விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.