எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராவேன் ராகுல் காந்தி!

Friday October 05, 2018

எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராக தயாராக இருக்கிறேன், இருப்பினும் இதில் முதல்கட்ட நடவடிக்கை பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒருங்கிணைய வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இருப்பினும் அதற்கு நேர்மறையான நகர்வு தென்படவில்லை என்ற நிலையே நீடிக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். 

சமாஜ்வாடி காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியும் நீடிக்கிறது. ஏற்கனவே ராகுல் காந்தில், பிரதமர் வேட்பாளராக நிற்க தயார் என குறிப்பிட்டார். இப்போது அதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவது கூட்டணியில் இணையாதது தொடர்பாக பேசினார்.    ‘‘மாநில சட்டசபை தேர்தல் என்பது வேறு. நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. அதைத்தான் மாயாவதி சுட்டிக்காட்டி இருப்பார் என்று நினைக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துவிடும் என்று நம்புகிறேன். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைந்துவிடும்’’ என்றார். மேலும் வலுவான கூட்டணிக்கான அறிகுறி எங்களுக்கு தெரிகிறது என்றும் தெரிவித்தார். 
 
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது காங்கிரசுக்கு உதவியாகத்தான் இருக்கும். என்றபோதிலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் கூறினார் ராகுல் காந்தி.

 எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ராகுல்காந்தி, ‘‘நிச்சயமாக. எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராகவே இருக்கிறேன்’’ என்று பதில் அளித்தார். இருப்பினும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து முதலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.