எதிர்ப்பு சக்தியளிக்கும் பிரண்டை!

வெள்ளி நவம்பர் 30, 2018

உணவே மருந்து

‘‘இன்றைய நவீன வாழ்க்கையில் சரியான உடற்பயிற்சி, உணவுமுறையை மேற்கொள்ள முடியாமல் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். எல்லா பணிகளையும் உட்காரும் இடத்திலிருந்து செய்து முடிக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உடல் உழைப்பு இல்லாத வேலைகள்தான் பெரும்பாலானோருக்கு அமைகிறது.

இத்தகைய வாழ்க்கை முறையால் மூட்டுவலி, உடல் உஷ்ணம், வயிற்று உபாதைகள் என பல பிரச்னைகளை சந்திக்கிறோம். இத்தகைய பிரச்னைகளை சமாளிக்க இயற்கையால் கொடுக்கப்பட்ட பொக்கிஷம்தான் பிரண்டை’’ என்கிறார் இயற்கை மற்றும் யோகா சிறப்பு மருத்துவர் இந்திராதேவி.பிரண்டையின் பெருமைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

பிரண்டை மருத்துவப் பயன்பாடு மிக்க ஒரு தாவரம். இது வஜ்ஜிரவல்லி என்ற பெயராலும், Cissus Quadrangularis என்றும் குறிப்பிடப்படுகிறது. பிரண்டைச் செடி சாதாரணமாக கொடிப் புதர்களில் வளரும் மூலிகைத் தாவரம். பொதுவாக, வெப்பமான இடங்களில் வளர்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

பிரண்டையில் மணிப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, புளிப்பிரண்டை, முப்பிரண்டை, இனிப்பு பிரண்டை மற்றும் காட்டுப்பிரண்டை போன்ற வகைகள் உண்டு. இதன் கணுக்கள் அருகருகே இருந்தால் பெண் பிரண்டை என்றும், தூரமாக இருந்தால் ஆண் பிரண்டை என்றும் வகை பிரிப்பார்கள்.

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலும்பு பலவீனமானவர்கள், எலும்பு முறிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம். வாய்வு பிடிப்பு, கை கால் குடைச்சல் உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படும்போது பிரண்டையை சூப்பாக செய்து சாப்பிட்டால், அந்த பிரச்னையைத் தீர்க்கும் தக்க மருந்தாக அமையும்.

மூலிகைப் பிரண்டையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.

இது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. பிரண்டையை உட்கொள்ளும்போது உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் குறையும், உடல் சூடு சீராகும். பிரண்டை வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதோடு செரிமானக் கோளாறுகள், பசியின்மையையும் போக்கவல்ல ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. நாவில் சுவை உணர்வு தன்மை குறைந்திருப்பவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாவின் சுவை தன்மை கூடும்.

தற்போதைய மழைக்காலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் அதிகம். அப்படி காய்ச்சல் வந்துவிட்டால் கை, கால் மூட்டு வலியும் இலவச இணைப்பாக ஏற்பட்டு விடும். அதற்கு பிரண்டையை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது மூட்டு வலிகளைத் தவிர்க்கலாம். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம். பிரண்டைத் துவையல் எலும்பு முறிவுக்கு மிக மிக சிறந்த மருந்தாகும். பிரண்டையில் கரோட்டினாய்ட்ஸ், டிரைடெர்பெனாய்ட்ஸ் (Triterpenoids), வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மகத்துவம் கொண்ட பிரண்டைச் செடியை வளர்ப்பது மிகவும் சுலபமானது. வீட்டில் கிடைக்கும் இடத்திலேயே நட்டு வைத்து வளர்க்க முடியும். பிற செடிகளுடன் சேர்த்தும் இந்த மூலிகைச் செடியை வளர்க்கலாம்.

இதற்கு பிரண்டைச் செடியை உடைத்து, சாதாரணமாக நட்டு வைத்தாலே போதும். உயரமாக வளரக்கூடிய கொடித் தாவரம் என்பதால் இது திராட்சை இனமாகக் கூறப்படுகிறது. பிரண்டை மூலிகைச் செடியை வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதால், அந்த மூலிகைக் காற்றை நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள நச்சுத் தன்மையைப் போக்குகிறது; நம் உடலுக்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

பிரண்டையைப் பயன்படுத்தும் முறை

பிரண்டையை துவையலாகவும், ஊறுகாயாகவும், குழம்பாகவும், ரசமாகவும், சட்னி, வடகம், சூப் போன்ற வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம். பிரண்டைத் துவையலை எளிதாக புளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி அரைத்து வாரத்தில் இருமுறை உட்கொள்ளும்போது எலும்புகள் வலுவடையும். எலும்புகள் தேய்மானம், எலும்புகளில் ஏற்படும் துளைகள் (Osteoporosis), இடுப்பு வலி வராமல் தவிர்க்கலாம். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி ஏற்படும். அதற்கு பிரண்டையை வாரத்திற்கு இரண்டு முறை காலை மற்றும் மதியம் என இரண்டு வேளை உணவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது குழந்தைகள் சாக்லெட், பிஸ்கட் போன்ற இனிப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் அவர்களுக்கு வயிற்றுப்பூச்சிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அத்தகைய சிக்கலைத் தவிர்க்க பிரண்டையை நெய்யில் வதக்கி துவையல் அரைத்து சாதத்தோடு அவர்களுக்கு கொடுத்து வந்தால் வயிற்று பூச்சிகள் அழியும். அதுபோல குழந்தைகளுக்கு வரக்கூடிய இயல்பான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் பிரண்டை மருந்தாக இருக்கிறது.

பிரண்டையைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல் பருமனைக் குறைக்கலாம். இது மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகப்படுத்தி கலோரிகளை வேகமாகக் குறைக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் குறைவதினால் நம் உடலில் இன்சுலின் அளவு தக்க வைக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு வராமலும் தவிர்க்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தும்போது நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.

பிரண்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பிரண்டையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை எடுத்துக் கொள்வது நல்லது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இட்லி, தோசை பயன்படுத்தும்போது பிரண்டையை சட்னியாக செய்து சாப்பிடலாம். இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், உறுதியான எலும்புகளுக்கும் உறுதுணையாக இருக்கும். பிரண்டை பெண்களுக்கு ஏற்ற உணவாகவும் இருக்கிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கும் பிரண்டை அருமருந்தாய் அமைகிறது.

பிரண்டையைப் பயன்படுத்தும் முன்…

பிரண்டையைப் பயன்படுத்துவதற்கு முன் நார் சுத்தமாக நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் சிறிய முட்களால் தொண்டையில் நமைச்சல், குத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், வாய்ப்பு கிடைப்பவர்கள் நெய்யில் பிரண்டையை வதக்கி உட்கொள்ளும்போது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.