எத்தனை தடைகள் வரினும் போராட்டம் தொடரும், முள்ளிக்குளம் மக்கள் அறிவிப்பு!

April 21, 2017

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தம்மை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யக்கோரி முள்ளிக்குளம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டமும்,முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டமும் தொடந்து இடம் பெற்று வருகின்றது.

முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 30 ஆவது நாளாகவும்,மறிச்சிக்கட்டி பகுதியில் முஸ்ஸீம் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்  26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நிலையில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி கிராம மக்களுக்கு தொடர்ந்தும் பல்வேறு தரப்பினர் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால்  அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள  தமது நிலத்தை மீட்டு தங்களை சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம்  கிராம மக்கள்  கடந்த மாதம்  23 ஆம் திகதி வியாழக்கிழமை  ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் மக்களின் போராட்டம் 30 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது. மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆதரவு தெரிவித்து நாளாந்தம் முள்ளிக்குளம் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர்.

மேலும் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மற்றும் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பல தரப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தமது நிலம் மீட்கப்பட்டு சொந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

-இதே வேளை முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு,புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி   இரத்துச் செய்ய   வேண்டும் எனவும் கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நல்லாட்சியை உருவாக்கிய சிறுபான்மையின மக்களின் நிலை இன்று கேள்விக்குறியாக இருப்பதாகவும், தமது பூர்வீக மண்ணை மீட்டெடுக்கும் வரையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எமது போராட்டம் தொடரும் என அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இணைப்பு: 
செய்திகள்